Tamilவிளையாட்டு

ஒலிம்பிக் தகுதி சுற்று – இந்திய ஆண்கள் குத்துச்சண்டை அணிக்கு 8 பேர் தேர்வு

ஒலிம்பிக் தகுதி சுற்றான ஆசிய-ஓசியானியா குத்துச்சண்டை போட்டி சீனாவின் வுஹான் நகரில் பிப்ரவரி 3-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் குத்துச்சண்டை அணியை தேர்வு செய்ய தகுதி போட்டி டெல்லியில் 2 நாட்கள் நடந்தது. இதில் மேரிகோம் உள்ளிட்ட 5 பேர் இந்திய அணிக்கு தேர்வானர்கள்.

இந்த நிலையில் இந்திய ஆண்கள் குத்துச்சண்டை அணிக்கு யாரை தேர்வு செய்வது என்பதை முடிவு செய்வதற்கான 2 நாள் தகுதி போட்டி பெங்களூருவில் இரண்டு நாட்கள் நடந்தது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் 69 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய முன்னணி வீரர் விகாஸ் கிருஷ்ணன், துர்யோதன் சிங் நெகியை வீழ்த்தி தனது இடத்தை உறுதி செய்தார். 26 வயதான விகாஸ் கிருஷ்ணன் ஒலிம்பிக்கில் 2 முறை பங்கேற்றவர் ஆவார். உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய, காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் கைப்பற்றி இருக்கிறார்.

இதே போல் காமன்வெல்த் விளையாட்டில் பதக்கம் வென்றவரான கவுரவ் சோலங்கி 57 கிலோ எடைப்பிரிவில் முகமது ஹூசாமுத்தினை தோற்கடித்து ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கு தேர்வானார்.

ஒலிம்பிக்கில் தகுதி சுற்றில் பங்கேற்கும் இந்திய ஆண்கள் குத்துச்சண்டை அணி வருமாறு:- அமித் பன்ஹால் (52 கிலோ), கவுரவ் சோலங்கி (57 கிலோ), மனிஷ் கவுஷிக் (63 கிலோ), விகாஸ் கிருஷ்ணன் (69 கிலோ), ஆஷிஷ் குமார் (75 கிலோ), சச்சின் குமார் (81 கிலோ), நமன் தன்வார் (91 கிலோ), சதீஷ் குமார் (91 கிலோவுக்கு மேல்).

தகுதி போட்டி மோதலை பார்வையிட்ட இந்திய ஆண்கள் குத்துச்சண்டை அணியின் உயர் செயல்பாட்டு இயக்குனர் சான்டியாகோ நீவா கூறுகையில், ‘ஒவ்வொரு எடைப்பிரிவிலும் மிகவும் நெருக்கமாக கடும் போட்டி நிலவியது. இறுதிகட்ட அணியை பார்க்க வலுவாக தெரிகிறது. ஒலம்பிக் தகுதி சுற்று போட்டிக்கு இன்னும் ஒரு மாத காலம் உள்ளது. அதற்குள் தேவையான சில விஷயங்களை சரி செய்து கடின பயிற்சி மேற்கொள்வோம்’ என்றார்.

இதற்கிடையே பெண்கள் தகுதி சுற்றில் 6 முறை உலக சாம்பியனான மேரிகோம், இளம் மங்கை நிகாத் ஜரீனை வீழ்த்தியதும், தன்னை ஏற்கனவே பலமுறை விமர்சித்ததால் ஆத்திரத்தில் அவரை வசைபாடியதோடு, கைகுலுக்கவும் மறுத்தார். இந்த சலசலப்பு குறித்து மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜூஜூ நேற்று கருத்து தெரிவிக்கும் போது ‘குத்துச்சண்டை போட்டியில் மேரிகோம் ஒரு ஜாம்பவான். அவர் அளவுக்கு உலக அமெச்சூர் குத்துச்சண்டையில் யாரும் சாதனை செய்ததில்லை. நிகாத் ஜரீன், மேரிகோமை போல திறமையை கொண்ட வியப்புக்குரிய வீராங்கனை. இருவரையும் நினைத்து இந்தியா பெருமிதம் கொள்கிறது. அதீத ஆர்வமும், உணர்ச்சிவசப்படுதலும் விளையாட்டின் உயிர்மூச்சு. ஒரு தொழில்முறை விளையாட்டில் அது மட்டுமே நம் மனதில் இருக்க வேண்டும். அதே சமயம் இந்தியாவின் சார்பில் விளையாடும் போது, மோசமான நடத்தையால் பாதகமான விளைவுகள் ஏற்பட்டு விடக்கூடாது.’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *