X

ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணிகள் பதக்கம் வெல்லும் – கேப்டன்கள் நம்பிக்கை

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்டு அடுத்த ஆண்டு (2021) ஜூலை 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை அரங்கேறுகிறது. ஒலிம்பிக் போட்டிக்கான ஒரு வருட கவுண்டவுன் நேற்று தொடங்கியது. இதையொட்டி இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங், இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் ஆகியோர் கருத்து தெரிவிக்கையில் இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணிகள் பதக்க மேடையை அலங்கரிக்க பிரகாசமான வாய்ப்பு இருப்பதாக கூறினார்கள்.

மன்பீரித் சிங் கூறுகையில் கடந்த ஆண்டில் எங்கள் அணி செயல்பட்ட விதத்தை பார்க்கும் போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல நிச்சயமாக நல்ல வாய்ப்பு இருக்கிறது. ஒரு அணியாக நாங்கள் நல்ல வளர்ச்சியை எட்ட போதிய காலஅவகாசம் இருக்கிறது. நாங்கள் செய்ய வேண்டிய பணிகளை சரியாக செய்வதில் கவனம் செலுத்தினால் முடிவுகள் தானாகவே நல்லபடியாக அமையும்.

நான் இதுவரை இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று இருக்கிறேன். எனவே பெரிய போட்டிகளில் ஆடிய அனுபவம் எனக்கு இருக்கிறது. இருப்பினும் ஒலிம்பிக் போட்டி என்றாலே எப்பொழுதும் வீரர்கள் மத்தியில் ஒருவிதமான பதற்றம் இருக்கத் தான் செய்யும். 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி எங்களுக்கு மோசமானதாக அமைந்தது. ஆனால் என்னை பொறுத்த மட்டில் அது சிறப்பான ஒன்றாகும். ஏனெனில் அது தான் எனக்கு முதலாவது ஒலிம்பிக் போட்டியாகும். 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு நாங்கள் முன்பை விட சிறந்த அணியாக சென்று நல்ல திறனை வெளிப்படுத்தினோம். ஆனாலும் விரும்பிய முடிவு கிடைக்கவில்லை. முன்பை விட சிறந்ததொரு நிலையை டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் எட்டவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றார்.

பெண்கள் அணியின் கேப்டன் ராணி ராம்பால் கூறுகையில் சமீப காலங்களில் முன்னணி அணிகளுக்கு எதிரான போட்டிகளில் விளையாடுகையில் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்க்கும் திறன் எங்கள் அணிக்கு இருக்கிறது என்பதை காட்டி இருக்கிறோம். நம்முடைய அணி விளையாடிய ஒவ்வொரு போட்டிகளிலும் ஏற்றம் கண்டு வருகிறது. அடுத்த ஒரு ஆண்டில் நமது ஆட்டத்தில் நிச்சயம் மேலும் மேம்பாடு அடைவோம். 36 ஆண்டுகளுக்கு பிறகு தகுதி பெற்று சரித்திரம் படைத்த ரியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியில் அங்கம் வகித்ததை சிறப்பு வாய்ந்ததாக கருதுகிறேன். அந்த போட்டியில் நாங்கள் சிறந்த முடிவை பதிவு செய்யாவிட்டாலும், அந்த ஒலிம்பிக்கில் இருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் விளையாடிய வீராங்கனைகள் அனைவரும் அந்த அனுபவத்தின் அடிப்படையில் டோக்கியோ ஒலிம்பிக் களத்தில் சாதுர்யமாக செயல்பட்டு அசத்துவார்கள் என நம்புகிறேன் என்றார்.