15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 2-ந் தேதி தொடங்குகிறது. இந்த சீசனில் புதிதாக லக்னோ, சூப்பர் ஜெயின்ட்ஸ் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 புதிய அணிகள் பங்கேற்கின்றன.
10 அணிகள் பங்கேற்பதால், ஐ.பி.எல். போட்டியின் ஆட்டங்கள் 74 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டி இந்தியாவில் நடந்த போது சில வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தப்பட்டது.
கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளை இந்தியாவில் ஒரே இடத்தில் நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி மராட்டிய மாநிலத்தில் ஐ.பி.எல் லீக் ஆட்டங்கள் நடக்கிறது. போட்டிகளை மும்பை, புனேயில் உள்ள மைதானங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் உள்ள வான்கடே மைதானம், டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியம், பிரபோர்ன் மைதானம், புனேயில் உள்ள எம்.சி.ஏ. மைதானம் ஆகிய 4 இடங்களில் லீக் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதில் மும்பையில் 55 ஐ.பி.எல். கிரிக்கெட் லீக் ஆட்டங்கள் நடத்தப்படுகிறது. 15 ஆட்டங்கள் புனேவில் நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. இறுதி போட்டி மே 29-ந் தேதி நடத்தப்படுகிறது. பிளே- ஆப் ஆட்டங்கள் மற்றும் இறுதிபோட்டி நடைபெறும் இடங்கள் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
ஐ.பி.எல். போட்டி அட்டவணையை இறுதி செய்வதற்கான ஐ.பி.எல். நிர்வாக கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதையடுத்து விரைவில் போட்டி அட்டவணை குறித்து இறுதி முடிவு அறிவிக்கப்படும்.