X

ஒரே போட்டியில் பல சாதனைகள் படைத்த சிராஜ்

இலங்கையின் பேட்டிங் முதுகெலும்பை சுக்குநூறாக்கிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 7 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 21 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். அவரது சிறந்த பந்து வீச்சு இதுவாகும். அவர் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தியது இதுவே முதல் முறையாகும்.

மேலும் சில சாதனை விவரம் வருமாறு:-

* முகமது சிராஜியின் 21 ரன்னுக்கு 6 விக்கெட், ஒரு நாள் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக ஒரு பவுலரின் மிகச்சிறந்த பந்துவீச்சாக பதிவானது. இதற்கு முன்பு பாகிஸ்தானின் வாக்கர் யூனிஸ் 1990-ம் ஆண்டு சார்ஜாவில் நடந்த இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 26 ரன்னுக்கு 6 விக்கெட் சாய்த்ததே சிறந்த பந்து வீச்சாக இருந்தது.

* அற்புதமாக பந்து வீசிய இந்திய பவுலர்களில் ஸ்டூவர்ட் பின்னி (4 ரன்னுக்கு 6 விக்கெட், வங்காளதேசம் எதிராக), அனில் கும்பிளே (12-6, வெஸ்ட் இண்டீஸ் எதிராக), பும்ரா (19-6, இங்கிலாந்துக்கு எதிராக) ஆகியோருக்கு அடுத்த இடத்தை முகமது சிராஜின் பந்து வீச்சு பிடித்துள்ளது.

* முகமது சிராஜ் தனது 2-வது ஓவரில் மட்டும் 4 விக்கெட்டுகளை வேட்டையாடினார். பந்து வாரியாக சாதனை விவரம் கணக்கிடப்பட்ட 2002-ம் ஆண்டில் இருந்து ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை அறுவடை செய்த 4-வது பவுலராக முகமது சிராஜ் திகழ்கிறார். ஏற்கனவே இலங்கையின் சமிந்தா வாஸ் (2003-ம் ஆண்டு வங்காளதேசத்துக்கு எதிராக), பாகிஸ்தானின் முகமத் சமி (2003-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக), இங்கிலாந்தின் அடில் ரஷித் (2019-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக) ஆகியோர் ஒரே ஓவரில் 4 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்கள்.

* 2008-ம் ஆண்டு ஆசிய கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மென்டிஸ் 6 விக்கெட் வீழ்த்தினார். அதன் பிறகு ஆசிய கோப்பை இறுதி ஆட்டத்தில் 6 விக்கெட் எடுத்த வீரர் சிராஜ் தான்.

* இலங்கையின் 50 ரன், ஒரு நாள் போட்டி இறுதிப்போட்டிகளில் ஒரு அணியின் மோசமான ஸ்கோராக அமைந்துள்ளது. இதற்கு முன்பு 2000-ம் ஆண்டு சார்ஜாவில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிரான இறுதிசுற்றில் இந்தியா 54 ரன்னில் ஆல்-அவுட் ஆகி இருந்ததே இந்த வகையில் சொதப்பல் ஸ்கோராக இருந்தது.

* இந்தியாவுக்கு எதிராக ஒரு அணியின் குறைந்த ஸ்கோரும் இது தான். 2014-ம் ஆண்டு மிர்புரில் நடந்த ஆட்டத்தில் வங்காளதேசம் 58 ரன்னில் அடங்கியதே முந்தைய தாழ்ந்த ஸ்கோராகும்.

Tags: tamil sports