ஒரே பாலியன ஜோடிகளின் திருமணத்துக்கு சட்டம் கோரிய வழக்கு சமூக பிரச்சினைகளும் சார்ந்தது – ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல்

சுப்ரீம் கோர்ட்டில் 6 ஆண்டுகளாக நீதிபதியாக பணியாற்றிய நீதிபதி எஸ்.கே.கவுல், கடந்த 25-ந் தேதி ஓய்வு பெற்றார். தனியுரிமையை அடிப்படை உரிமையாக அங்கீகரித்தல், 370-வது பிரிவு ரத்துக்கு ஒப்புதல் போன்ற முக்கிய தீர்ப்புகளை அளித்த அமர்வில் அவர் இடம்பெற்றிருந்தார்.

ஒரே பாலினத்தவர் திருமணம் செய்து கொள்ள சட்ட அங்கீகாரம் கோரிய வழக்கில், கடந்த அக்டோபர் 17-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு தீர்ப்பு அளித்தது. அதிலும், நீதிபதி கவுல் இடம்பெற்று இருந்தார். அந்த அமர்வு, ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க முடியாது என்று கூறியது.

இந்நிலையில், அந்த தீர்ப்பு குறித்து ஒரு செய்தி நிறுவனத்துக்கு நீதிபதி எஸ்.கே.கவுல் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

ஒரே பாலின ஜோடிகளின் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரிய வழக்கு, வெறும் சட்ட பிரச்சினைகள் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. சமூக பிரச்சினைகளும் சார்ந்தது.

பொதுவாக ஏதேனும் ஒரு விஷயத்தை சமூகம் ஏற்றுக்கொள்வதற்கு நீண்ட காலம் பிடிக்கும். சட்டம் மாறும்போது, சமூகம் மாறும். சில நேரங்களில், சமூகம் மாறினால், அது சட்டமும் மாறுவதற்கு தூண்டுகோலாக அமையும். ஒரே பாலின திருமணம் குறித்த சமூகத்தின் பார்வையில் மாற்றம் ஏற்பட்டால், மத்திய அரசும் அதுபற்றி சிந்திக்கக்கூடும். அத்தகைய திருமணங்களை அங்கீகரிக்க சட்டம் கொண்டுவரவும் வாய்ப்புள்ளது.

எனவே, இந்த தீர்ப்பால், ஒரே பாலினத்தவர் தங்கள் இலக்கை அடைவதில் தாமதம் ஏற்பட்டு இருக்கலாம். ஆனால், சமூகத்தின் பார்வையில் மாற்றம் ஏற்பட்டால், எதிர்காலத்தில் சட்டம் வர தூண்டுகோலாக இருக்கும். நீதிபதிகளை நியமிக்க தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தை மத்திய அரசு அமைத்தபோது, அது செயல்பட வாய்ப்பே கிடைக்கவில்லை. அந்த ஆணையத்தை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தபோது, சுப்ரீம் கோர்ட்டு மீது அரசியல் கட்சிகளுக்கு அதிருப்தி ஏற்பட்டது.

அதன்விளைவாக, சுப்ரீம் கோர்ட்டு ‘கொலீஜியம்’ செயல்பாட்டில் உரசல் எழுந்துள்ளது. கொலீஜியம் சுமுகமாக செயல்படுவதாக சொன்னால் அது உண்மையல்ல. கொலீஜியம் செய்த பரிந்துரைகள் இன்னும் நிலுவையில் இருப்பதே அதற்கு சாட்சி. இப்போது, நடைமுறையில் இருப்பது கொலீஜியம்தான். எனவே, அதை பின்பற்றித்தான் ஆக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news