X

ஒரே பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு! – குடிமக்களின் சுதந்திரத்திற்கு ஆரவாக நிற்போம் என்று காங்கிரஸ் அறிவிப்பு

ஒரே பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘ஒரே பாலின திருமணம் மற்றும் அதுதொடர்புடைய விஷயங்கள் குறித்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அளித்த மாறுபட்ட தீர்ப்புகளை ஆய்வு செய்து வருகிறோம். அதன் முடிவில் எங்களின் விரிவான கருத்தை வெளியிடுவோம். அதேநேரம், குடிமக்களின் சுதந்திரம், விருப்பங்கள், உரிமைகளுக்கு ஆதரவாக எப்போது காங்கிரஸ் நிற்கும். அனைவரையும் உள்ளடக்கும் கட்சியாக, சட்டரீதியாக, சமூகரீதியாக, அரசியல் ரீதியாக பாகுபாடற்ற நடைமுறையில் நாங்கள் உறுதியான நம்பிக்கை வைத்துள்ளோம்’ என்று கூறியுள்ளார்.

ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க மறுத்து சுப்ரீம் கோர்ட்டு கூறிய தீர்ப்புக்கு ஆர்.எஸ்.எஸ். வரவேற்பு தெரிவித்துள்ளது. அதன் அகில பாரதிய பிரசார பிரமுகரான சுனில் அம்பேத்கர் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘ஒரே பாலின திருமணம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரவேற்புக்கு உரியது. இதுகுறித்த அனைத்து விஷயங்களையும் நமது ஜனநாயக பாராளுமன்ற அமைப்பு தீவிரமாக விவாதிக்கலாம், அதன் முடிவில் சரியான முடிவுகளை எடுக்கலாம்’ என்று கூறியுள்ளார்.

ஒரே பாலின திருமணம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு ஜமாத் உலமா இ ஹிந்த் (மவுலானா மக்மூத் மதானி பிரிவு) ஆதரவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மதானி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஒரே பாலின திருமணம் தொடர்பான மிக முக்கியமான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ளது. பல்வேறு சமூக, அரசு மற்றும் மத அமைப்புகளின் வாதங்களை கவனமாக ஆராய்ந்த பிறகு இந்த முடிவுக்கு சுப்ரீம் கோர்ட்டு வந்துள்ளது. திருமணம் என்ற பாரம்பரிய அமைப்பை பாதுகாப்பதாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது’ என்று கூறியுள்ளார்.

Tags: tamil news