X

ஒரே நேரத்தில் ஆடுகளத்திற்கு வந்த இரண்டு பேட்ஸ்மேன்கள் – விராட் கோலி விளக்கம்

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நேற்று முன் தினம் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 134 ரன்களே சேர்த்தது. பின்னர் ஒரு விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் சேர்த்து தென்ஆப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

இந்திய அணி 7.2 ஓவரில் 63 ரன்கள் எடுத்திருக்கும்போது தவான் 25 பந்தில் 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது மறுமுனையில் விராட் கோலி நின்றிருந்தார். தவான் ஆட்டமிழந்ததும் ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் அய்யர் ஆகிய இருவரும் ஒருசேர பேட்டிங் செய்ய மைதானத்திற்குள் இறங்கி ஆடுகளம் நோக்கி நடந்து வந்தனர்.

அப்போது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, கேப்டன் விராட் கோலிக்கும் வியப்பாக இருந்தது. இறுதியில் ரிஷப் பந்த் ஆடுகளத்திற்குள் வந்தார். ஷ்ரேயாஸ் அய்யர் திரும்பிச் சென்றார். ஆனால் இருவரும் சொற்ப ரன்கள் எடுத்த நிலையில் சுழற்பந்து வீச்சாளரான போர்ச்சுன் பந்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

போட்டிக்கு பின் இந்த குழப்பம் குறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘10 ஓவர்களுக்கு பின்னர் என்றால் ரிஷப் பந்த் வர வேண்டும், அதற்கு முன்பு என்றால் ஷ்ரேயாஸ் அய்யர் வரவேண்டும் என்று நாங்கள் முடிவு செய்திருந்ததாக நினைக்கிறேன்.

இருவரும் ஆடுகளத்தை நோக்கி வரும்போபோது, கொஞ்சம் வேடிக்கையாக இருந்தது. மேலும், இருவரும் ஆடுகளத்திற்குள் வந்திருந்தால் இன்னும் வேடிக்கையாக இருந்திருக்கும். ஏனென்றால், ஆடுகளத்திற்குள் மூன்று பேட்ஸ்மேன்கள் இருந்திருப்போம்.

இருவரும் குழப்பம் அடைந்துள்ளனர். யார் யார் எப்போது களம் இறங்க வேண்டும் எனத் தெளிவாக புரிந்து கொள்ளவில்லை’’ என்றார்.

Tags: sports news