மைனா திரைப்படத் தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.
மைனா, சாட்டை போன்ற பல படங்களை தயாரித்தவர் ஜான் மேக்ஸ். இவர் மோகனவேல் என்பவரிடம் ரூ.9 லட்சம் பெற்றுக் கொண்டு வேப்பம்பட்டில் உள்ள தனது நிலத்திற்கு பொது அதிகாரம் வழங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மோகனவேலிடம் சென்று, அந்த நிலத்தில் வில்லங்கம் இருப்பதாக பொய் சொல்லி அவரிடம் இருந்து அசல் பத்திரத்தை ஜான் மேக்ஸ் வாங்கியுள்ளார்.பின்னர் மோகனவேலுக்கு தெரியாமல் பொது அதிகாரத்தை ரத்து செய்துவிட்டு வேறொரு நபருக்கு பொது அதிகாரம் வழங்கி நிலத்தை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பொது அதிகாரத்தை ரத்து செய்தது தெரிந்து மோகனவேல், ஜான்மேக்ஸிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் ஜான் மேக்ஸ் அந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் அலைக்கழித்து வந்துள்ளார். இதையடுத்து மோகனவேல் ஆவடி காவல் ஆணையகரத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் புகாரளித்துள்ளார்.புகாரை பெற்றுக் கொண்டு வழக்குப்பதிவு செய்த போலீசார் விருகம்பாக்கத்தில் உள்ள ஜான் மேக்ஸை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.