Tamilசெய்திகள்

ஒரே நாடு, ஒரே மொழி என்ற பெயரில் தமிழர்களின் உரிமையை பறிப்பவர்களை விரட்டுவோம் – வைகோ அறிக்கை

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

1956 நவம்பர் 1-ம் நாள் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, அறிவிப்பு வெளியிடப்பட்டது. சென்னை மாகாணத்தில் இருந்து தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழி பேசும் மக்கள் அடங்கிய பகுதிகள் முறையே ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களுடன் இணைக்கப்பட்டன.

தமிழ் மொழி பேசும் மக்களின் தாயகமாக சென்னை மாநிலம் உருவானது. மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது, தமிழகம் பல பகுதிகளை இழந்தது. தமிழர் தாயகத்தின் எல்லைகளை வரையறுக்க வடக்கு எல்லைப் போராட்டமும், தெற்கு எல்லைப் போராட்டமும் மிக வீரியமாக முன்னெடுக்கப்பட்டன.

மார்ஷல் நேசமணி, எஸ்.சாம் நத்தானியல், பி.எஸ்.மணி உள்ளிட்டத் தலைவர்கள் மக்களைத் திரட்டி, தெற்கு எல்லைப் போராட்டத்தை நடத்தினர். போராட்டக் களத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். வடக்கு எல்லையைக் காப்பாற்ற சிலம்புச் செல்வர் ம.பொ.சி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

பேரறிஞர் அண்ணா எல்லைப் போராட்டங்களுக்கு ஆதரவு நல்கினார். தி.மு.க. தொண்டர்கள் எல்லைப் போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றனர் என்பதும் மறுக்க முடியாத வரலாறு ஆகும். தமிழர் தாயகம் உருவான நவம்பர் 1-ல் எல்லைப் போராட்டத்தை முன்னெடுத்த தலைவர்களுக்கும், உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கும் வீரவணக்கம் செலுத்துவோம்.

தமிழ்த் தேசிய இனம் போராடிப் பெற்ற உரிமைகளைப் பறித்து, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்று இந்து ராஷ்டிரத்தை உருவாக்கக் கூப்பாடு போடும் இந்துத்துவ சனாதன சக்திகளை தமிழ் மண்ணில் இருந்து துடைத்து எறிய இந்நாளில் உறுதி ஏற்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.