ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து விவாதிக்க பிரதமர் மோடி அழைப்பு

இந்தியாவில் 1950-ம் ஆண்டு, ஜனவரி 25-ந் தேதி தேர்தல் கமிஷன் ஏற்படுத்தப்பட்டது. இந்த நாள் 2011-ம் ஆண்டு முதல் தேசிய வாக்காளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.

நேற்று இந்த நாளையொட்டி பிரதமர் மோடி, நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க. தொண்டர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:-

1950-ம் ஆண்டு முதல் இன்று வரை சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை தேர்தல் கமிஷன் நடத்தி அதன் கண்ணியத்தை பாதுகாத்து வருகிறது.

நம் நாட்டில் உள்ள தேர்தல் கமிஷனுக்கு, அதிகாரிகளை இட மாற்றம் செய்யக்கூடிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பல ஜனநாயக நாடுகளில் தேர்தல் கமிஷனுக்கு அத்தகைய அதிகாரம் வழங்கப்படவில்லை இல்லை.

1951-52-ம் ஆண்டில் 45 சதவீதம் என்ற அளவிலேதான் இருந்த வாக்குப்பதிவு சதவீதம் தற்போது 2019 நாடாளுமன்ற தேர்தலில் இது 67 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இருப்பினும் பொதுமக்கள் முதல் அரசியல் கட்சிகள் வரையில் அனைவரும் குறைவாக வாக்குகள் பதிவாவது குறித்து சிந்தித்து பார்க்க வேண்டும்.

கல்வி அறிவு மற்றும் வளமான பகுதிகளாக கருதப்படுகிற நகர்ப்புறங்களில் கூட குறைந்த வாக்குப்பதிவு சதவீதத்தைத்தான் பார்க்க முடிகிறது. படிப்பறிவு உள்ளவர்கள் சமூக ஊடகங்களில் விவாதிக்கிறார்கள். ஓட்டு போடத்தான் வருவதில்லை.

இதனால் ஒவ்வொரு தேர்தலிலும் 75 சதவீத வாக்குப்பதிவு ஏற்படுவதை பா.ஜ.க. தொண்டர்கள் மற்றும் பிற கள பணியாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பொதுமக்களின் ஆதார் எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க சமீபத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது தேர்தலின் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும்.

அடிக்கடி தேர்தல்கள் நடைபெறுவது நாட்டின் முன்னேற்றத்தை தடுக்கிறது. இதை சரி செய்வதற்கு ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே வாக்காளர் பட்டியல் என்பது தான் சரியாக இருக்கும் என கருதுகிறேன். மக்கள், கல்வியாளர்கள், வல்லுனர்கள், அறிவுஜீவிகள் ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து விவாதிக்க வேண்டும். வெவ்வேறு கருத்துகள் வெளியே வரட்டும்.

என்னை பொறுத்தவரை தேர்தல் என்பது ஜனநாயக  திருவிழா. ஆட்சிக்கு வருவதற்காக மட்டுமல்லாமல்  மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவே தேர்தலில் போட்டியிட வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools