ஒரே ஒரு புகைப்படத்தால் மாடலிங் துறையில் நுழைந்த பலூன் விற்பனை செய்யும் பெண்
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் அண்டலூர் காவு பரசுராமன் கோவிலில் நடைபெறும் தைய்யம் விழா மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்த திருவிழாவின்போது கிஸ்பு என்னும் வடமாநில பெண் கோவில் வாசலில் அமர்ந்து பலூன் வியாபாரம் செய்து வந்தார். அப்போது அங்கு வந்த புகைப்பட கலைஞர் அர்ஜூன் கிருஷ்ணன் கிஸ்புவை புகைப்படம் எடுத்தார்.
அந்த புகைப்படங்களை கிஸ்புவிடமும், அவர் தாயாரிடமும் காட்டினார். பின்னர் அந்த படத்தை அவர்களின் அனுமதியுடன் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அந்த புகைப்படம் இணைய தளத்தில் வைரலானது.
புகைப்பட கலைஞர் அர்ஜூன் கிருஷ்ணன் பதிவிட்ட படங்களில் இந்த படம் அதிகமாக பகிரப்பட்டது. இதையடுத்து கிஸ்புவை வைத்து மாடலிங் போட்டோ ஷூட் நடத்தவும் முடிவு செய்தார். இதற்கு அவரது குடும்பத்தினர் சம்மதித்தனர்.
மேக்கப் கலைஞர் ரம்யா பிரஜுல் கிஸ்புவை மாடலிங்குக்கு ஏற்ப அலங்காரம் செய்தார். பின்னர் மாடலிங் புகைப்படத்தையும் கிஸ்பு பலூன் விற்றுக் கொண்டிருந்த பழைய புகைப்படத்தையும் பகிர்ந்தார்.
அந்த படங்கள் தற்போது இணையதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. இதன்மூலம் கிஸ்புவுக்கு மாடலிங் வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.
கேரளாவில் கடந்த வாரம் மம்மிக்கா என்ற 60 வயது கூலித்தொழிலாளி மாடலிங் கலைஞராக அசத்தினார். இந்த வாரம் பலூன் வியாபாரி கிஸ்பு மாடலிங் தொழிலுக்கு வந்துள்ளார்.
ஒரே புகைப்படம் கிஸ்புவின் வாழ்க்கை பாதையை மாற்றியுள்ளது.