ஒரு வாரத்திற்கு ஆம்லெட் சாப்பிட மாட்டேன் – எலான் மஸ்க் அறிவிப்பு
உலகின் முன்னணி கோடீசுவரர்களில் ஒருவரான எலான் மஸ்க், தனது வித்தியாசமான கருத்துகள் வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறுவது வாடிக்கை. தனது கருத்துகளை வித்தியாசமாகவும், துணிவாகவும் முன்வைக்கக் கூடியவர் அவர். இந்த நிலையில் அவர், “ஒரு வாரத்திற்கு ஆம்லெட் சாப்பிடுவதில்லை” என்று சபதம் எடுத்துள்ளார். அவரது விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், சமீபத்தில் ஒரு ராக்கெட்டை ஏவியது. அப்போது ஏவுதளத்தின் அருகே சில பறவைகளின் கூடுகளும், முட்டைகளும் சேதம் அடைந்தது.
இதுகுறித்து அமெரிக்காவின் முன்னணி செய்தித்தாள், ‘ஸ்பேஸ்எக்ஸ் தளத்தால் வனவிலங்கு பாதுகாப்பு பின்னுக்கு தள்ளப்படுகிறது’ என்று தலைப்பிட்டு முதல்பக்க செய்தியாக வெளியிட்டு இருந்தது. அதில் ராக்கெட் ஏவுதலின்போது 9 பறவைக்கூடுகளும், முட்டைகளும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டு உள்ளது. முட்டைகள் சேதமடைந்த படங்களும் வெளியிடப்பட்டு இருந்தன.
இதுகுறித்து எலான்மஸ்க் தனது நிறுவனத்தின் தவறுகளுக்கு வருந்துவதுபோல பதிலளித்து ‘ஒரு வாரத்திற்கு ஆம்லெட் சாப்பிட மாட்டோம்’ என்று வாக்குறுதி அளித்தார்.