X

ஒரு ரூபாய் கூட பெறாமல் மக்களுக்கு இலவச சேவை செய்கிறோம் – பிரதமர் மோடி பெருமிதம்

அமெரிக்காவைப் போல இரண்டு மடங்கு மக்கள் தொகை கொண்ட இந்தியா, மக்களிடமிருந்து ஒரு ரூபாய் கூட பெறாமல் அவர்களுக்கு எல்லாவித சேவைகளையும் செய்து வருகிறது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

வாரணாசியில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடி காணொலி மூலமாகக் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், ‘’கொரோனா பெருந்தொற்று நிலவும் காலத்தின் போதும் நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் இருக்கும், புனிதத்துவம் வாய்ந்த, அருள் நிறைந்த வாரணாசி நகரத்தின் மக்களுக்கு பிரதமர் பாராட்டுகள்.

சேவை மனப்பான்மையுடனும், தைரியத்துடனும், தேவையுள்ள மக்களுக்கு தொடர்ந்து உதவியையும், ஆதரவையும் மக்கள் எவ்வாறு அளித்து வருகிறார்கள் என்கிற தகவல்கள் எனக்கு தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. கொரோனா வராமல் தடுப்பதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், பல்வேறு மருத்துவமனைகளின் நிலைமைகள், தனிமைப்படுத்தப்படும் வசதி, புலம்பெயர் தொழிலாளர்கள் நலன் ஆகியவை குறித்த தகவல்களும் வந்து கொண்டிருக்கின்றன.

வாரணாசி நகரம் அன்னபூரணி அன்னை, பாபா விஸ்வநாத் ஆகியோரின் பூரண அருள் பெற்றது என்பதால் காசி நகரத்தில் எவருமே பசியுடன் தூங்க மாட்டார்கள் என்ற பழைய நம்பிக்கை ஒன்று உண்டு. இந்த நேரத்தில் ஏழை மக்களுக்கு சேவை செய்யும் ஒரு கருவியாக நம்மை கடவுள் இயக்குகிறார் என்பது, நாம் பெற்ற பெரும் பேறாகும்.

இந்தப் புனித நகரத்தில் பல்வேறு மத ரீதியான செயல்பாடுகள் நிறுத்தப்பட்டிருந்த போதிலும், கொரோனாவை எதிர்த்துப் போராடுவதில் வாரணாசி மக்கள் மற்ற எவருக்கும் சளைத்தவர்கள் அல்ல. ஏழை மக்களுக்கும், தேவைப்படும் நிலையில் உள்ள மக்களுக்கும், உணவு, மருந்துப் பொருள் போன்றவற்றை தொடர்ந்து வழங்கி ஆதரவு அளித்து வருகிறார்கள். அரசு அமைப்புகள், உள்ளாட்சி நிர்வாக அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றுவதற்காக, தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் முயற்சிகள் பாராட்டுக்குரியவை.

மிகக்குறுகிய காலத்திலேயே சமூக சமையற்கூடங்களை அமைத்து, உணவுக்கான உதவித் தொடர்பு எண்கள் கொண்ட விரிவான இணைப்பை உருவாக்கியது, பல்வேறு உதவித் தொடர்பு எண்களை ஏற்படுத்தியது, அறிவியல்பூர்வமான தகவல் புள்ளிவிபரங்களின் உதவியை எடுத்துக் கொள்வது, வாரணாசி ஸ்மார்ட் சிட்டியில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்வது ஆகியவற்றின் மூலமாக ஒவ்வொருவரும் எல்லா நிலைகளிலும் ஏழை மக்களுக்கு உதவி செய்யும் முழுத் திறன் பெற்றவர்கள். உணவு வழங்குவதற்கு போதுமான அளவு வண்டிகள் இல்லை என்றபோது உள்ளாட்சி நிர்வாகத்துக்கு, அஞ்சல் துறை உதவி அளித்தது. சேவை செய்பவர்கள், சேவையின் பலன்களை எதிர்பார்ப்பதில்லை. அவர்கள் தங்களின் தன்னலமற்ற சேவையை அல்லும் பகலும் தொடர்வார்கள்.

மிக அதிகமான மக்கள் தொகை மற்றும் இதர சவால்கள் உள்ள இந்தியா, இந்த பெருந்தொற்றை எதிர்த்துப் போராடும் திறன்கள் கொண்டதா? என்பது குறித்து பல நிபுணர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். 23-24 கோடி மக்கள் தொகை கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்தத் தொற்று கட்டுப்படுத்த முடியாததாக இருக்கும் என்ற அச்சம், மாநில மக்களின் ஒத்துழைப்பு மற்றும் கடின உழைப்பின் காரணமாக அகற்றப்பட்டுவிட்டது. தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொற்று பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக குணம் அடைந்து வருகிறார்கள்.

தேவைப்படுகின்ற மக்களுக்கு பல்வேறு வசதிகளை மத்திய அரசு செய்து தருகின்றது. இந்தத் திட்டங்கள் மூலமாக 80 கோடி மக்கள் பயன்பெறுவார்கள். இந்தத் திட்டங்களின் கீழ் இலவச ரேஷன் பொருட்கள் மட்டுமல்லாமல், இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்களும் வழங்கப்படுகின்றன.

அமெரிக்காவைப் போல இரண்டு மடங்கு மக்கள் தொகை கொண்ட இந்தியா, மக்களிடமிருந்து ஒரு ரூபாய் கூட பெறாமல் அவர்களுக்கு எல்லாவித சேவைகளையும் செய்து வருகிறது. இந்தத் திட்டம் நவம்பர் மாத இறுதி வரை அதாவது தீபாவளி, சாத் பூஜா காலம் வரை நீடிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கைவினைஞர்களின் குறிப்பாக நெசவாளர்களின் பலவிதமான சிரமங்களையும் போக்குவதற்காக வாரணாசியில் வியாபாரிகள், வர்த்தகர்கள் ஆகியவர்களுடன் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் கூறினார். 8,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு கட்டமைப்பு மற்றும் இதர திட்டங்கள் துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது’’என அவர் தெரிவித்தார்.