Tamilசெய்திகள்

ஒரு மாநிலத்திற்கு மட்டும் நீட் தேர்வில் விளக்கு அளிக்க முடியாது – அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

இந்தியா முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் எனப்படும் தேசிய தகுதி தேர்வு மூலம் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் நீண்ட காலமாக பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில்தான் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து, தமிழ்நாட்டில் கடந்த 2016-ம் ஆண்டு நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் பலத்த எதிர்ப்பையும் மீறி தமிழகத்தில் நீட் தேர்வு முறை கொண்டு வரப்பட்டது.

இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த 5-ந்தேதி நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 14 நகரங்களில் அமைக்கப்பட்டு இருந்த 188 மையங்களில் 1¼ லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வை எழுதினார்கள்.

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாரதீய ஜனதாவின் கூட்டணி கட்சியான அ.தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் பாரதீய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரியுமான பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது நீட் தேர்வு தொடர்பான கேள்வி ஒன்றுக்கு அவர் பதில் அளிக்கையில், நீட் தேர்வில் இருந்து ஒரு மாநிலத்துக்கு மட்டும் விலக்கு அளிப்பது சாத்தியம் இல்லை என்றார். தற்போது அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வை ஏற்றுக்கொண்டு விட்டதாகவும் அவர் கூறினார்.

நீட் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளிடம் தேர்வு மையங்களில் தீவிர சோதனை நடத்துவதற்கு பல்வேறு தரப்பினரும் பலத்த எதிர்ப்பு தெரிவித்து இருப்பது பற்றி பிரகாஷ் ஜவடேகரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படியே தேர்வு மையங்களில் மாணவ-மாணவிகளிடம் சோதனை நடத்தப்படுவதாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *