கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்துள்ளது. இதனால் ஒகேனக்கலில் தற்போது 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதன் காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் பரிசலில் உற்சாகமாக சென்று இயற்கை அழகை ரசித்து வருகிறார்கள்.
ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை 12 ஆயிரத்து 400 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்றும் அதே அளவில் வந்து கொண்டிருக்கிறது.
அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் கடந்த மாதம் 14-ந் தேதி முதல் அப்படியே காவிரி மற்றும் கால்வாயில் வெளியேற்றப்படுகிறது. அதன் படி இன்றும் அணையில் இருந்து காவிரியில் 12 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 400 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் தண்ணீரும், அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரும் சமமாக இருப்பதால் அணை நீர்மட்டம் 30 -வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது. இதனால் மேட்டூர் அணை தொடர்ந்து கடல் போல காட்சி அளிக்கிறது. அணைக்கு வரும் தண்ணீரை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.