X

ஒரு புகைப்படத்தால் பிரபலமான நாகர்கோவில் மூதாட்டியை நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

தமிழக அரசு கொரோனா 2-ம் கட்ட நிவாரணமாக ரூ.2 ஆயிரம் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கியது. இதனை நாகர்கோவில் கீழ கலுங்கடி பகுதியைச் சேர்ந்த 90 வயதான பாட்டி வேலம்மாளும் பெற்றுக் கொண்டார்.

நிவாரண நிதியை பெற்றுக் கொண்ட வேலம்மாள் பாட்டி பொக்கை வாயுடன் சிரிக்கும் புகைப்படம் ஊடகங்களில் வெளியானது. இதனை கண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதோடு இந்த ஏழை தாயின் சிரிப்பே, நமது அரசின் சிறப்பு எனவும் கூறியிருந்தார். அந்த பாட்டிக்கு அண்மையில் தமிழக அரசு முதியோர் உதவித்தொகை வழங்கியிருந்தது.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகர்கோவில் வருவதை வேலம்மாள் பாட்டி அறிந்தார். அவர், முதல்-அமைச்சரை சந்திக்க விரும்பினார்.

முதல்-அமைச்சர் நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் இருப்பதை அறிந்து அவரை சந்திக்க அங்கு சென்றார். விருந்தினர் மாளிகையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் பாட்டியை விருந்தினர் மாளிகைக்குள் அனுமதிக்க மறுத்தனர்.

இதையடுத்து கொளுத்தும் வெயிலில் பாட்டி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்க்க காத்திருந்தார். இந்த தகவல் அதிகாரிகள் மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு சென்றது. இதையறிந்ததும் அவர், அந்த பாட்டியை சந்திக்க விருந்தினர் மாளிகை அறையில் இருந்து வெளியே வந்தார்.

பார்வையாளர் பகுதியில் நின்று கொண்டிருந்த பாட்டியை பார்த்தார். நேராக அவர் இருந்த பகுதிக்கு சென்றார். மு.க.ஸ்டாலினை பார்த்ததும் வேலம்மாள் பாட்டி எழுந்து நிற்க முயன்றார். அவரை நாற்காலியில் அமரும்படி பரிவுடன் கூறிய மு.க.ஸ்டாலின், பாட்டியின் அருகே குனிந்து அவரது குறைகளை கேட்டார்.

கொரோனா நிவாரண நிதி தந்ததற்கு மீண்டும் ஒருமுறை பொக்கை வாய் திறந்து நன்றி கூறிய பாட்டி, இப்போது தனக்கு தங்க வீடு இல்லை என்றும், அதற்கு ஏற்பாடு செய்து தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின், உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.