ஒரு நாள் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்த 10ம் வகுப்பு மாணவி!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மிளகனூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. 7 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த பள்ளிக்கூடத்தில் நேற்று ஒருநாள் தலைமை ஆசிரியர் இருக்கையில் காவ்யா என்ற மாணவி அலங்கரித்தார். 10-ம் வகுப்பு மாணவியான அவர் உத்தரவுகள் பிறப்பிக்க மற்ற மாணவ-மாணவிகள் கேட்டு நடந்தனர். முன்னதாக தலைமை ஆசிரியர் விநாயகமூர்த்தி உள்ளிட்ட ஆசிரியர்கள் காவ்யாவை வரவேற்று தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர வைத்து வருகைப்பதிவேட்டில் கையெழுத்திட்டனர்.

தலைமை ஆசிரியர் பணி குறித்து மாணவிக்கு, விநாயக மூர்த்தி விளக்கினார். அதன்பின் ஆசிரியர்களுடன் காவ்யா ஆலோசனை நடத்தினார். பின்னர் ஒவ்வொரு வகுப்பிற்கும் சென்று ஆய்வு செய்தார். மாணவ-மாணவியர்களிடம் படிப்பு மட்டுமின்றி விளையாட்டு உள்ளிட்ட பிற துறைகளிலும் ஆர்வம் காட்ட வேண்டும் என அறிவுறுத்தினார்.

மாணவி தலைமை ஆசிரியரானது எப்படி? என்பது குறித்து கேட்டபோது, நேற்று பெண் குழந்தைகள் தினம் என்பதால் அதன் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாணவி ஒருவரை ஒரு நாள் தலைமை ஆசிரியராக நியமித்துள்ளனர்.

அந்த வாய்ப்பு மாணவி காவ்யாவுக்கு கிடைத்துள்ளது. அதாவது, வருகை பதிவு, சக மாணவ, மாணவியர்களிடம் பழகும் மனப்பான்மை, பிறருக்கு உதவி செய்தல் போன்றவற்றில் சிறந்து விளங்கியதால் காவ்யாவை ஒரு நாள் தலைமை ஆசிரியையாக தேர்வு செய்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news