ஒரு நாள் தொடர் வரலாற்றில் புதிய சாதனை படைத்த ஹிர்த்திக் பாண்ட்யா
இங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி போட்டி நேற்று முன் தினம் நடந்தது. இதில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. ஆட்டநாயகனாக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகன் விருதை ஹர்த்திக் பாண்ட்யா தட்டிச் சென்றார்.
இந்த போட்டியில் ஹர்த்திக் பாண்ட்யா பந்து வீச்சில் 4 விக்கெட்டும் பேட்டிங்கில் 71 ரன்களும் எடுத்திருந்தார். இதன் மூலம் அவர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் வெளிநாட்டு மண்ணில் நடந்த ஒரு போட்டியில் 50+ ரன்கள் மற்றும் 4 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை பாண்ட்யா படைத்துள்ளார்.
இதற்கு முன் ஸ்ரீகாந்த் (1988), சச்சின் (1998), கங்குலி (1999 & 2000), யுவராஜ் (2008 & 2011) ஆகியோர் சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் போட்டிகளில் 50 ரன்களும் 4 விக்கெட்டுகளை எடுத்து உள்ளனர். ஆனால் பாண்ட்யா தான் முதல் முறையாக வெளிநாட்டு மண்ணில் இதனை சாதித்துள்ளார்.
ஹார்த்திக் பாண்ட்யா அதைவிட டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வகையான கிரிக்கெட்டிலும் ஒரு போட்டியில் 50+ ரன்கள் மற்றும் 4 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றையும் அவர் படைத்துள்ளார்.
ஏற்கனவே டெஸ்ட் (52* ரன்கள் & 5/28 விக்கெட், 2018) மற்றும் டி20 கிரிக்கெட்டில் (51 ரன்கள் & 4/33 விக்கெட், 2022) அவர் 50+ ரன்களும் 4 விக்கெட்களும் இதே இங்கிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து மண்ணில் பதிவு செய்துள்ளார். உலக அளவில் பாகிஸ்தானின் முஹமது ஹஃபீசுக்கு பின்பு இந்த அரிதான சாதனையை செய்யும் 2-வது வீரராக பாண்ட்யா உள்ளார்.