இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் ஆர்.அஸ்வின். சென்னையை சேர்ந்த இவர் தற்போது டெஸ்ட் அணியில் மட்டுமே விளையாடி வருகிறார்.
34 வயதான அஸ்வின் 2010-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆனார். அவர் 78 டெஸ்டில் விளையாடி 409 விக்கெட் கைப்பற்றினார். குறைந்த டெஸ்டில் 400 விக்கெட்டை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை அவர் சமீபத்தில் நிகழ்த்தி இருந்தார்.
அஸ்வின் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் மிக அபாரமாக பந்து வீசினார். 4 டெஸ்டில் அவர் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரை பதித்தார்.
அஸ்வின் கடைசியாக 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவரில் விளையாடினார். அதன்பிறகு அவர் இந்த போட்டிகளில் ஆடவில்லை.
டெஸ்ட் பந்து வீச்சாளர் என்று முத்திரை குத்தப்பட்டு ஒரு நாள் போட்டி, 20 ஓவர் ஆட்டத்திற்கான இந்திய அணியில் இருந்து அவர் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டார்.
கேப்டன் வீராட் கோலி சமீபத்தில் அளித்த பேட்டியில், அஸ்வின் ஒரு நாள் போட்டி, 20 ஓவர் அணிக்கு திரும்ப வாய்ப்பு இல்லை. சுழற்பந்து ஆள் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் சிறப்பான நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் வாய்ப்பு வழங்கினால் ஒரு நாள் போட்டி, 20 ஓவர் ஆட்டத்தில் சாதித்து காட்டுவேன் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.
ஒரு நாள் போட்டி, 20 ஓவரில் என்னால் சிறப்பாக செயல்பட முடியும், வாய்ப்பு வழங்கினால் ஆட்டத்தின் தன்மையை என்னால் மாற்றிக்காட்ட முடியும்.
ஒரு நாள் போட்டி, 20 ஓவரில் நான் இடம் பெறாதது குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்புகிறார்கள். நான் அதைப்பற்றி கவலைப்பட வில்லை.
இவ்வாறு அஸ்வின் கூறினார்.
அஸ்வின் 111 ஒரு நாள் போட்டியில் விளையாடி 150 விக்கெட்டும், 46 இருபது ஓவர் ஆட்டத்தில் 52 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளார்.