ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை – பேட்ஸ்மேன்களில் கோலி முதலிடத்தில் நீடிப்பு
ஒரு நாள் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட்கோலி (871 புள்ளி), துணை கேப்டன் ரோகித் சர்மா (855 புள்ளி), பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் (829 புள்ளி) ஆகியோர் மாற்றமின்றி முறையே முதல் 3 இடங்களில் தொடருகின்றனர். அயர்லாந்துக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் சதம் அடித்த இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் ஒரு இடம் முன்னேறி 22-வது இடத்தையும், பேர்ஸ்டோ ஒரு இடம் ஏற்றம் கண்டு 13-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் நியூசிலாந்து வீரர் டிரென்ட் பவுல்ட் (722 புள்ளி) முதலிடத்திலும், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா (719 புள்ளி) 2-வது இடத்திலும் நீடிக்கிறார்கள். அயர்லாந்துக்கு எதிரான தொடரில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் 4 இடங்கள் முன்னேறி 25-வது இடத்தையும், 8 விக்கெட்டுகள் சாய்த்த வேகப்பந்து வீச்சாளர் டேவிட் வில்லி 6 இடங்கள் அதிகரித்து 51-வது இடத்தையும் பிடித்துள்ளனர். ‘ஆல்ரவுண்டர்கள்’ தரவரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி முதலிடத்தில் தொடருகிறார். இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 8-வது இடத்தில் உள்ளார்.