கிரிக்கெட்டில் இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களாக விராட் கோலி (இந்தியா), கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து), ஜோ ரூட் (இங்கிலாந்து), ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா) ஆகியோர் கருதப்படுகிறார்கள்.
ஆனால் ஸ்மித் கடந்த ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியின்போது பந்து சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடை பெற்றார். இதனால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக கருதப்பட்டது.
ஆனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அவருக்கு துணையாக நின்றதால், சரியான ஓராண்டு தடை முடிந்ததும் சர்வதேச போட்டிக்கு திரும்பினார். முதல் டெஸ்டாக இங்கிலாந்துக்கு எதிராக பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
இந்த டெஸ்டின் இரண்டு இன்னிங்சிலும் சதம் விளாசி அசத்தினார். இதன்மூலம் 25 சதங்கள் அடித்துள்ளார். மேலும், 118 இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்து சிறந்த வீரர் என்பதை நிரூபித்துள்ளார்.
ஸ்மித் 118 இன்னிங்சில் 25 சதங்களுடன் 6343 ரன்கள் குவித்துள்ளார். விராட் கோலி 25 சதங்களுடன் 5994 ரன்கள் சேர்த்துள்ளார். ஜோ ரூட் 16 சதங்களுடன் 5643 ரன்கள் அடித்துள்ளார். கேன் வில்லியம்சன் 20 சதங்களுடன் 5438 ரன்களும் அடித்துள்ளனர்.