ஒரு சில போட்டிகளை வைத்து வீரர்களின் திறமையை மதிப்பிட மாட்டோம் – பயிற்சியாளர் ராகுல் டிராவிட்

ஐ.சி.சி.20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16-ந் தேதி முதல் நவம்பர் 13-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.

கடந்த ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டி இந்தியாவுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது.

லீக் சுற்றிலேயே போட்டியில் இருந்து வெளியேறியது. தற்போது புதிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித்சர்மா தலைமையில் உலக கோப்பையை இந்தியா எதிர்கொள்கிறது.

இந்தநிலையில் 20 ஓவர் உலக கோப்பைக்கான வீரர்கள் தேர்வு விவகாரத்தில் தெளிவாக உள்ளோம் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான அணி எந்த மாதிரியாக இருக்க வேண்டும் என்பதில் கேப்டன் ரோகித் சர்மா, தேர்வு குழுவினர், அணி நிர்வாகம் என எங்கள் அனைவருக்குமே ஒரு தெளிவு இருக்கிறது.

அதற்கென தனி பார்முலா இருப்பதாக நாங்கள் கருதவில்லை. ஆனால் அணி சமநிலையுடன் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

ஏற்கனவே உள்ள அணியை சற்று பொருத்தமானதாக மாற்றுகிறோம். ஒவ்வொரு வீரருக்குமான பணிச்சுமையை நிர்வகிப்பதிலும் கவனம் செலுத்தப்படுகிறது. தற்போது உள்ள வீரர்களில் ஆஸ்திரேலிய ஆடுகளங்களுக்கு ஏற்ப திறமையுடன் இருப்பவர்கள் குறித்து ஒரு தெளிவு இருக்கிறது.

ஆனாலும் எல்லோருக்கும் தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்பை தர விரும்புகிறோம்.

20 ஓவர் போட்டி கடினமானது ஆகும். அதில் ஆடும் வீரர்களை குறுகிய காலத்தில் எடை போட இயலாது. அவர்களது ஆட்டத்தை அறிய சரியான வாய்ப்புகள் வழங்கப்படும்.

20 ஓவர் போட்டியில் ஒரு பேட்ஸ்மேன் எப்போதுமே அதிரடியாக விளையாட வேண்டும். அவர்களை (ருதுராஜ் கெய்க்வாட், அவேஸ்கான்) ஒரு சில ஆட்டங்களை கொண்டு மதிப்பிடமாட்டோம். தொடர்ந்து வாய்ப்புகளை வழங்க உள்ளோம்.

நன்றாக விளையாடியதால்தான் அவர்கள் இந்திய அணியில் இடம் பிடித்து உள்ளனர். ஒரு தொடர், ஒரு ஆட்டத்தை கொண்டு அவர்கள் திறமையை மதிப்பிடமாட்டோம்.

ஓய்வு பெறுவதற்கு பரிசீலனை செய்யுமாறு விருத்திமான் சஹாவிடம் தனிப்பட்ட முறையில் கூறியதை அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தது வருத்தமில்லை. இந்திய கிரிக்கெட்டில் அவரது பங்களிப்பு மற்றும் சாதனைகளுக்காக சஹா மீது எப்போதும் மரியாதை கொண்டிருக்கிறேன்.

ஆனாலும் இது போன்ற சில சந்தர்ப்பங்களை தவிர்க்க இயலாது. 11 பேரை தேர்வு செய்யும் முன்பாக சில தெளிவுகளை ஏற்படுத்த ஒரு தலைமை பயிற்சியாளராக அதை நான் அவ்வாறு பேசிதான் ஆக வேண்டும். நான் கூறுவதை வீரர்கள் ஏற்பதும், ஏற்காததும் அவர்களது தனிப்பட்ட விருப்பம்.

இவ்வாறு ராகுல்ராவிட் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools