Tamilசெய்திகள்

ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி – காங்கிரஸ் சிந்தனை அமர்வு மாநாட்டில் தீர்மானம்

2024ம் ஆண்டு நடைபெறும் பாராளுன்ற தேர்தலில் வெற்றிபெற காங்கிரஸ் கட்சி தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இது தொடர்பாக  ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் சிந்தனை அமர்வு மாநாட்டில் அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் அக்கட்சி தலைவர் சோனியாகாந்தி ஆலோசனை நடத்தினார்.

இந்த மாநாட்டின் நிறைவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சியின் பொதுச் செயலாளர் அஜய் மாக்கன் இந்த தீர்மானங்களை வாசித்தார்.

அதன்படி, காங்கிரஸ் கட்சியில் ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி என்று விதி அமல்படுத்தப்படும். காங்கிரஸ் சார்பில் பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்கள் உள்பட தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிகளில் இருப்பவர்களுக்கு ஓய்வு வயது நிர்ணயிக்க இந்த மாநாட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட உள்ள மொத்த தொகுதியில் பாதி இடங்களுக்கு 50 வயதுக்கு குறைவானவர்களுக்கு வாய்ப்பு அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் மற்றும் சட்டப் சபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான அரசியலமைப்புத் திருத்தம் கொண்டு வரவும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசியல் சார்பற்ற நடவடிக்கைகளில் காங்கிரஸ் இளைஞர் அணித் தலைவர்கள் முக்கிய பங்கு வகிக்கவும், தீவிரமாக செயல்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் உள்ள விதிகள் ஏழை குழந்தைகளின் சம உரிமையை பறிப்பதாகவும், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளியை அதிகரிக்கும் என்றும் காங்கிரஸ் மாநாட்டில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சாதிக் கணக்கெடுப்புத் தரவை மத்திய அரசு வேண்டுமென்றே வெளியிடவில்லை என்றும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் உரிமைகளைப் பறிப்பதே இதன் நோக்கம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாதிக் கணக்கெடுப்புத் தகவல்களைப் பகிரங்கப்படுத்தவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் உரிமைகளைப் பெறவும் தீவிர போராட்டத்தை நடத்துவது என்றும், உதய்பூர் சிந்தனை அமர்வு மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.