X

ஒரு கிலோ வெங்காயம் ரூ.33க்கு விற்பனை – அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்

வெங்காயம் விலை உயர்ந்ததை தொடர்ந்து சென்னையில் காமதேனு மற்றும் சிந்தாமணி கூட்டுறவு அங்காடிகளில் வடமாநிலங்களில் இருந்து வெங்காயம் வரவழைத்து குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

மகாராஷ்டிரா வெங்காயம் கிலோ ரூ.45-க்கும், ஆந்திரா வெங்காயம் ரூ.33-க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தேனாம்பேட்டை காமதேனு அங்காடிக்கு சென்று வெங்காய விற்பனையை தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த சில நாட்களாக பெரிய வெங்காயம் விலை அதிகரித்ததை அறிந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக வெங்காய விலையை கட்டுப்படுத்தும் வகையில் கூட்டுறவு கடைகளில் வெங்காயத்தை குறைந்த விலைக்கு விற்க உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து உணவுத்துறை அமைச்சர் காமராஜும், நானும் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து வெங்காயத்தை நேரடியாக மகாராஷ்டிரா, ஆந்திரா மாநிலங்களில் வாங்கி கூட்டுறவு கடைகள், பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் வெங்காயத்தை விற்க ஏற்பாடு செய்துள்ளோம்.

மத்திய தொகுப்பில் இருந்து 56 ஆயிரம் மெட்ரிக் டன் வெங்காயத்தில் 20 ஆயிரம் மெட்ரிக் டன் வெங்காயத்தை தந்து விட்டனர். இன்னும் 36 ஆயிரம் மெட்ரிக் டன் வெங்காயம் வர வேண்டும். அதை வாங்குவதற்கும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஆந்திரா வெங்காயத்தை நாங்கள் ரூ.33-க்கு விற்பனை செய்கிறோம். இதை 3 நாட்களுக்குத்தான் வைத்திருக்க முடியும். இந்த வெங்காயம் எண்ணெய் அதிகம் குடிக்கும். அதனால் தான் இந்த வெங்காயத்துக்கு பதில் மகாராஷ்டிரா வெங்காயத்தை பலர் வாங்குகிறார்கள்.

மகாராஷ்டிரா வெங்காயத்தை கிலோ ரூ.45-க்கு கூட்டுறவு கடைகளில் விற்பனை செய்கிறோம்.

வெளி மார்க்கெட் சந்தையில் பெரிய வெங்காயத்தை ரூ.60 வரை விற்கிறார்கள். அதை கட்டுக்குள் கொண்டு வருவதற்காகத்தான் கூட்டுறவு கடைகளில் வெங்காயம் விற்க ஏற்பாடு செய்துள்ளோம். சென்னையில் இதன் கட்டுப்பாட்டில் உள்ள 200 ரேசன் கடைகளில் வெங்காயம் விற்கப்பட்டு வருகிறது.

எனவே ஆந்திரா வெங்காயம் கிலோ ரூ.33-க்கும் மகாராஷ்டிரா வெங்காயம் கிலோ ரூ.45-க்கும் கூட்டுறவு ரேசன் கடைகளில் கிடைக்கிறது.பொதுமக்கள் கடைகளுக்கு சென்று வாங்கிக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் முதன்மை செயலாளர் தயானந்த் கட்டாரியா, பதிவாளர் கோவிந்தராஜ், டி.யு.சி.எஸ். தலைவர் தேவேந்திரம், டான்பெட் தலைவர் செல்லப்பாண்டி, இணை பதிவாளர் சந்திரசேகர் கலந்து கொண்டனர்.

Tags: south news