X

ஒருநாள் போட்டியில் வாய்ப்பு கிடைத்தால் சரியான பயன்படுத்தி கொள்வேன் – சாஹல் பேட்டி

இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சாளர் இடத்திற்கு ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அக்ஷர் பட்டேல் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட அணியில் அனேகமாக மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பிடிப்பார்கள். இதில் ஜடேஜா, குல்தீப் யாதவுக்கு இடம் உறுதி. மற்றொரு இடத்திற்கு யுஸ்வேந்திர சாஹல், அக்ஷர் பட்டேல் ஆகியோரில் ஒருவருக்கு அதிர்ஷ்டம் அடிக்கும். 33 வயதான ‘லெக் ஸ்பின்னர்’ யுஸ்வேந்திர சாஹலை பொறுத்தவரை இந்த ஆண்டில் வெறும் 2 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார். அணியில் தேர்வு செய்யப்பட்டாலும் பெரும்பாலும் வெளியே உட்கார வைக்கப்படுகிறார்.

இது குறித்து வெஸ்ட் இண்டீசில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எப்போதும் களம் இறங்கும் 11 பேர் கொண்ட அணி அதாவது சரியான அணிச்சேர்க்கைக்கே முதல் முன்னுரிமை அளிக்கப்படும். இது ஒன்றும் புதிதல்ல. இந்திய ஒரு நாள் போட்டி அணியில் பொதுவாக 7-வது பேட்டிங் வரிசையில் ரவீந்திர ஜடேஜா அல்லது அக்ஷர் பட்டேல் விளையாடுகிறார்கள். ஆடுகளம் முழுக்க முழுக்க சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உகந்ததாக இருந்தால் மட்டுமே 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடுகிறோம். குல்தீப் யாதவ் உண்மையிலேயே சிறப்பாக பந்து வீசுகிறார். தற்போது நல்ல நிலையில் உள்ளார். அதனால் தான் என்னை விட அவருக்கு ஆடும் லெவனில் இடம் வழங்கப்படுகிறது. ஆனாலும் நான் தொடர்ந்து வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். எப்போது வாய்ப்பு கிடைத்தாலும், அதை என்னால் சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஆஸ்திரேலியா (மார்ச் மாதம்) மற்றும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்று இருந்தும் களம் இறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் அணியினருடனே பயணிக்கிறேன். அணிக்குரிய நீலநிற சீருடையை ஒவ்வொரு நாளும் அணிவது அளவில்லா மகிழ்ச்சி அளிக்கிறது. நான் ஒன்றும் வீட்டில் இருக்கவில்லை. அணியில் நானும் அங்கம் வகிக்கிறேன். கிரிக்கெட் தனிநபர் போட்டி அல்ல. குழு போட்டி. அணியில் இருக்கும் 15 பேரும் வெற்றிக்காக உழைக்கிறோம். அதில் 11 பேர் மட்டுமே களம் இறங்க வாய்ப்பு பெற முடியும். ஆடுகள சூழலுக்கு ஏற்ப லெவன் அணி தேர்வு செய்யப்படுகிறது.

நான் இதுவரை 4 கேப்டன்களின் கீழ் விளையாடி இருக்கிறேன். அவர்கள் எல்லாம் எனது சகோதரர் மாதிரி. ஒரு குடும்பம் போல் நினைக்கிறேன். டோனி தான் மூத்த சகோதரர். அடுத்து விராட் கோலி, அதன் பிறகு ரோகித் சர்மா. இப்போது ஹர்திக் பாண்ட்யா. ஆனால் நோக்கம் ஒன்று தான். மைதானத்திற்குள் வந்து விட்டால் எல்லோரும் வெற்றி பெற விரும்புகிறோம். ஒரு பவுலரான எனக்கு அவர்கள் (சீனியர்) முழு சுதந்திரம் தந்தனர். ஹர்திக் பாண்ட்யாவும் அதே போல் பவுலர்களை வழிநடத்துகிறார். இப்போது நான் ஆசிய கோப்பை அல்லது உலகக் கோப்பை கிரிக்கெட் குறித்து சிந்திக்கவில்லை. முழு கவனமும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரை சிறப்பாக நிறைவு செய்வதில் தான் இருக்கிறது.

இவ்வாறு சாஹல் கூறினார்.

Tags: tamil sports