தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. ஒமைக்ரான் என்ற அந்த வைரஸ் மற்ற உருமாறிய வைரஸ்களை விட வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலகளவில் இதுவரை 63 நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் தீவிரம் காட்டி வருவதால், அந்நாட்டில் எச்சரிக்கை அளவை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் நேற்று ஒரே நாளில் 1,239 பேர் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், ஒமைக்ரான் தொற்று மொத்த எண்ணிக்கை 3,137 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக எச்சரிக்கை நிலை மூன்றில் இருந்து நான்காக உயர்த்தி அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
நான்காவது நிலை என்பது தொற்று பரவல் அதிகரிப்பு நிலை, சுகாதார சேவைகள் மீதான அழுத்தம் உள்ளிட்டவையை குறிக்கும். இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்திற்கான நான்கு தலைமை மருத்துவ அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார அமைப்பான இங்கிலாந்து ஹெல்த் பாதுகாப்பு அமைப்பின் ஆலோசனையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.