ஒன்றிய பா.ஜ.க. அரசு நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது – அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை தென்காசி புதிய பஸ் நிலையம் முன்பு தீவிர பிரசாரம் செய்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதும் இவை அனைத்தும் நிறைவேற்றப்படும். சொன்னதை செய்யும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார். அதற்கு நீங்கள் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75-க்கும், டீசல் ரூ.65-க்கும் விற்பனை செய்யப்படும். தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் முழுமையாக அகற்றப்படும். இதனால் நீங்கள் சுங்கச்சாவடிக்கு கட்ட வேண்டிய கட்டணம் ஒன்றிய அரசுக்கு செலுத்த வேண்டியது இல்லை.
நெல்லை-சங்கரன்கோவில் ரெயில்வே வழித்தடத்தை இணைத்து ஆலங்குளம், சுரண்டை, சேர்ந்தமங்கலம் பகுதிகளை உள்ளடக்கிய திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். கோவையில் இருந்து சென்னை செல்லும் ரெயில் கடையம் பகுதியில் நின்று செல்ல வழிவகை செய்யப்படும்.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மக்களின் அன்பை பெற்று அவர்களின் ஆதரவு மூலம் முதலமைச்சர் ஆனவர் தி.மு.க. தலைவர். ஆனால் எடப்பாடி பழனிசாமி தவழ்ந்து சென்று சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் ஆனார். பின்னர் அவருக்கே துரோகம் செய்தார்.
கொரோனா உச்சத்தில் இருந்தபோது தடுப்பூசி செலுத்திக்கொண்டு கோவையில் கொரோனா வார்டுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்த ஒரே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும், ஆவின் பால் லிட்டருக்கு 2 ரூபாயும் குறைத்தவர் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முதலமைச்சர் ஏற்படுத்திய மகளிருக்கு இலவச பஸ் திட்டத்தின் மூலம் தென்காசி மாவட்டத்தில் மட்டும் பெண்கள் 25 கோடி முறை பயணம் செய்துள்ளனர்.
அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகள் மேற்படிப்புக்காக திராவிட மாடல் ஆட்சியால் செயல்படுத்தப்படும் மாதம் ரூ.1000 திட்டத்தின் கீழ் 3.50 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் மட்டும் 4 ஆயிரம் பேர் பயன்பெறுகிறார்கள்.
திராவிட மாடல் ஆட்சியின் சாதனை திட்டமான முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூலம் 31 ஆயிரம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறுகிறார்கள். இதில் தென்காசி மாவட்டத்தில் மட்டும் 22 ஆயிரம் பள்ளி மாணவர்கள் பயன்பெறுகிறார்கள். இந்த திட்டத்தை தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களும் பின்பற்றி வருகின்றன.
கலைஞரின் மகளிர் உரிமைத்தொகைக்காக 1 கோடியே 60 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 1 கோடியே 18 லட்சம் பேருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள தகுதி வாய்ந்த அனைத்து பெண்களுக்கும் கலைஞர் உரிமைத்தொகை விரைவில் வழங்கப்படும். சென்னை மிச்சாங் புயலின்போதும், நெல்லை, தூத்துக்குடி வெள்ளப்பாதிப்பின் போதும், நீட் தேர்வால் 22 மாணவர்கள் இறந்தபோதும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவும் பிரதமர் மோடி வரவில்லை. தேர்தலுக்கு தேர்தல் மட்டுமே தமிழ்நாட்டுக்கு வருகிறார்.
கடந்த தேர்தல்களின்போது பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகள் எதையும் அவர் நிறைவேற்றவில்லை. 5 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் எய்ம்ஸ்க்காக ஒற்றை செங்கலை நட்டு வைத்தனர். அதையும் நான் எடுத்துக்கொண்டு வந்து விட்டேன். ஆனால் அதன் பின்னர் பா.ஜ.க. ஆளும் 6 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் முதலமைச்சர் சென்னையில் ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என கூறியதுடன் 10 மாதத்தில் அது கட்டி முடிக்கப்பட்டு தற்போது அது பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளது.
தமிழக மக்கள் ஒன்றிய அரசுக்கு ஜி.எஸ்.டி. வரியாக 1 ரூபாய் செலுத்தினால் அதனை பிரித்து தமிழ்நாட்டிற்கு ரூ.29 பைசா மட்டுமே வழங்குகிறது. ஆனால் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களான உத்தரபிரதேசத்திற்கு 3 ரூபாயும், பீகாருக்கு 7 ரூபாயும் வழங்குகிறது. இதனால் ஒன்றிய பா.ஜ.க. அரசு நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது. இதனால் பிரதமர் மோடியை இனி மிஸ்டர் 29 பைசா என்றே அழைக்க வேண்டும். எனவே மாநிலங்களுக்கு நிதி உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் அரசு அமையவும், தமிழ்நாட்டில் முதலமைச்சர் கைகாட்டும் நபர் பிரதமராக வருவதற்கு இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.