‘ஒத்த செருப்பு – Size 7’ – திரைப்பட விமர்சனம்
’ஒருவரே எழுதி, இயக்கி, நடித்து, தயாரித்த முதல் திரைப்படம்’ என்று இந்திய மற்றும் ஆசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும், பார்த்திபனின் இந்த ‘ஒத்த செருப்பு – Size 7′ எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.
கொலை குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு போலீசாரால் விசாரிக்கப்படும் மாசிலாமணி, (பார்த்திபன்) கொலை செய்ததை ஒப்புக்கொள்வதோடு, மேலும் சில கொலைகளையும் தான் செய்ததாக சொல்வதோடு, அந்த கொலைகளை எதற்காக செய்தேன், எப்படி செய்தேன் என்று போலீசிடம் விவரிக்கிறார். அவரது அழகான மனைவிக்காக தான் அந்த கொலைகளை அவர் செய்ததாக நாம் யூகிக்கும் போது, ஒரு கட்டத்தில் அவரது மனைவியையே அவர் கொலை செய்திருப்பாரோ!, என்று நினைக்கும் அளவுக்கு கதையில் ட்விஸ்ட் வர, அதைவிடவும் ஒரு ட்விஸ்ட்டாக, இத்தனை கொலைகள் செய்தாலும், உடல் நிலை சரியில்லாத எனது மகனுக்காக, நான் தண்டனை பெறாமல் இருப்பேன், அதை அந்த பெருமாள் செய்வார், என்று நம்புவதாக பார்த்திபன் போலீசாரிடம் கூறுகிறார். பார்த்திபனின் இந்த வெள்ளந்தியான பேச்சைக்கேட்டு சிரிக்கும் போலீசார், இறுதியில் பார்த்திபனின் புத்திசாலித்தனத்தை கண்டு வியக்கிறார்கள். அப்படி அவர் என்ன செய்தார், அவருக்கு தண்டனை கிடைத்ததா இல்லையா, என்பது தான் கிளைமாக்ஸ்.
5 அல்லது 6 ஆண்டுகளில் இறக்க போகும், உடல் நிலை சரியில்லாத மகன், அதிக அழகோடும், அளவில்லா ஆசையோடும் இருக்கும் மனைவி, இவர்களின் தேவையை பூர்த்தி செய்ய கூடிய பொருளாதாரம் இல்லாமல் தவிக்கும் மாசிலாமணி என்ற எளியமையான மனிதனின் ஏழ்மையான அதே சமயம் சந்தோஷமான வாழ்க்கையை, பணம் என்ற பூதம் எப்படி நாசமாக்குகிறது, என்பதை இயக்குநராகவும், நடிகராகவும், நம் ஆழ்மனதில் பதிய வைக்கும் பார்த்திபன், திரையில் மற்ற கதாபாத்திரங்களை காட்டவில்லை என்றாலும், அவர்களின் உணர்வுகளை நாம் உணரும்படி செய்துவிடுகிறார்.
பரபரப்பும், விறுவிறுப்பும் நிறைந்த ஒரு சஸ்பென்ஸ் க்ரைம் மிஸ்டரி படமாக எடுக்க வேண்டிய அல்லது ஏற்கனவே எடுக்கப்பட்ட கதையாக இருந்தாலும், ஒரே ஒரு மனிதனை வைத்து, ஒரே ஒரு அறையில், இந்த கதயை அழுத்தமாக சொல்வதோடு, ஒலி வடிவில் வர கூடிய மற்ற கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மனதில் நிற்கும்படி சொல்வதில் இயக்குநராக வெற்றி பெற்றிருக்கும் பார்த்திபன், நடிகராக டபுள் வெற்றி பெற்றிருக்கிறார்.
பார்த்திபன் டச் என்ற நக்கலான பேச்சுக்கள், மேலோட்டமாகவும் மிக குறைவாகவும் இருப்பதோடு, இதுவரை பார்க்காத நடிகர் பார்த்திபனையும் பார்க்க முடிகிறது.
கொடூரமாக பலரை கொலை செய்ததாக போலீசாரிம் சொல்லும் பார்த்திபனை எந்த காட்சியிலும் படம் பார்ப்பவர்கள் கொலைகாரணாக பார்க்க முடியாமல், “அய்யோ பாவம்…” என்று அவர் மீது இரக்கப்படும் விதத்தில் காட்சிகளில் செண்டிமெண்ட் நிறைந்திருக்கிறது. பார்த்திபன் தன் மனைவியின் அழகை வர்ணிக்கும் போதும் சரி, அவர் பற்றிய உண்மை போலீசிடம் சொல்லும் போது சரி, அந்த கதாபாத்திரத்தை கண்முன் கொண்டு வருபவர், தனது உடல் நிலை பாதிக்கப்பட்ட மகனின் சந்தோஷம் மற்றும் வலிகலையும் தனது நடிப்பின் மூலம் நம்மை உணர வைத்துவிடுகிறார்.
ஒரு நடிகர் பல கெட்டப்புகளில் பல கதாபாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள். ஆனால், பார்த்திபன் ஒருவர் பல வித கதாபாத்திரங்களை ஒரே கெட்டப்பில் நம் கண்முன் நிறுத்துவது சபாஷ் சொல்ல வைக்கிறது.
பார்த்திபனின் வழக்கமான நக்கல் பேச்சோடு, ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப சொல்வது போன்ற காட்சிகளோடு தொடரும் படத்தின் முதல் பாதி சற்று சலிப்படைய வைத்தாலும், இடைவேளைக்குப் பிறகு தான் செய்த கொலைகள் குறித்தும் அதற்கான காரணம் மற்றும் மனைவி குறித்து பார்த்திபன் விவரிக்கும் போது, கதையோடு நாம் ஒன்றினைந்து விடுகிறோம்.
அதிலும், க்ளைமாக்ஸில் வரும் ட்விஸ்ட் லாஜிக்கோடு இருப்பது திரைக்கதைக்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது. ஒரு மாஸ் ஹீரோவுக்கான கதையாக இருந்தாலும், அதில் ஹீரோவை ரொம்ப சாதாரண மனிதனாக காட்டியதோடு, அதை ரசிகர்களும் ஏற்றுக்கொள்ள வைத்தது, பார்த்திபனின் நடிப்பு 50 சதவீதம் என்றால், மீதி 50 சதவீதம் தொழில்நுட்பம். குறிப்பாக 7ம் அளவு கொண்ட அந்த ஒத்த செருப்பின் ரகசியமும், அதை க்ளைமாக்ஸில் தெரியப்படுத்த விதமும் நச்சென்று இருக்கிறது.
ஒரே அறை, ஆனால் ஒவ்வொரு பிரேமிலும் புதுஷாக தெரியும்படி ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் ராம்ஜி. எது பின்னணி இசை என்று புரிந்துக்கொண்டு இசையமைத்த இசையமைப்பாளர் சி.சத்யா, ஒரே முகத்தை இரண்டு மணி நேரம் பார்த்தாலும், ரசிகர்களின் கவனம் மற்ற கதாபாத்திரங்கள் மீதும் இருக்கும்படி காட்சிகளை வெட்டிய படத்தொகுப்பாளர் ஆர்.சுதர்சன், ஒலி வடிவில் இருக்கும் கதாபாத்திரங்களை படம் பார்ப்பவர்கள் உருவங்களாக பாவிக்க நினைத்த ஒலி வடிவமைப்பாளர்கள் ரெசூல் பூக்குட்டி மற்றும் அம்ரித் ப்ரீத்தம் என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறார்கள்.
நடிகராக புதிய பரிணாமத்தை காட்டியிருக்கும் பார்த்திபன் இயக்குநராகவும் காட்சிகளிலும், குறிப்பாக சாமாணியர்களின் வாழ்க்கை குறித்து பேசும் வசனங்களிலும் கைதட்டல் பெறுகிறார்.
மொத்தத்தில், பழைய களமாக இருந்தாலும், அதை புதிய முயற்சியோடு சொல்லப்பட்டிருக்கும் இந்த ‘ஒத்த செருப்பு – Size 7′ பார்த்திபனுக்கு மீண்டும் ஒரு புதிய பாதையாகவும், ரசிகர்களுக்கு புது அனுபவமாகவும் இருக்கிறது.
-ரேட்டிங் 3.5/5