ஒடிசாவின் வறுமையை கண்டு நான் வேதனைப்படுகிறேன் – பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். பிரதமர் மோடி இன்று காலை பூரியில் உள்ள ஜெகநாதர் கோவிலில் வழிபாடு நடத்தினார். அதை தொடர்ந்து அவர் ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இரு புறத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரளாக நின்று அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
ரோடு ஷோவை முடித்த பிறகு தேன்கனலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-
25 ஆண்டுகால பிஜு ஜனதா தள அரசு ஒடிசா மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. இன்று ஒட்டு மொத்த ஒடிசாவும் இதை சிந்திக்கிறது. ஒடிசா மாநிலம் இயற்கை வளங்கள் மிக்கதாக இருந்த போதிலும் அங்கு அதிக வறுமை இருப்பதை கண்டு நான் வேதனைப்படுகிறேன். பிஜு ஜனதா தளம் ஆட்சியில் ஒடிசாவில் கனிமங்கள், கலாச்சாரம் பாதுகாப்பாக இல்லை. இந்த ஆட்சியில் பூரியில் உள்ள ஜெகன்நாதர் கோவில் பாதுகாப்பற்றதாக இருக்கிறது. கடந்த 6 ஆண்டுகளாக ஜெகநாதரின் கருவூலகத்தின் சாவிகள் காணவில்லை. ஒடிசா முதல்-மந்திரி அலுவலகம், வீடு போன்றவற்றை ஒரு சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.
ஒடிசாவில் பா.ஜ.க.வை தேர்ந்தெடுங்கள். மாநிலத்தின் மகன் அல்லது மகளை முதல்-மந்திரி ஆக்குவோம். ஜூன் 10-ந்தேதி ஒடிசாவில் முதன்முறையாக இரட்டை என்ஜின் ஆட்சி அமைக்கப்படும். பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள உங்கள் அனைவரையும் அழைக்க வந்துள்ளேன்.
புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்ட கனிம நிதியில் இருந்து ஒடிசா ரூ.26,000 கோடி பெற்றது. அந்தப் பணத்தை சாலைகள், பள்ளிகள் மற்றும் குடிநீருக்காகச் செலவழித்து இருக்க வேண்டும். ஆனால் பிஜு ஜனதா தளம் அரசு அதை தவறாகப் பயன்படுத்தியுள்ளது. இந்த ஆட்சியில் சிறு தொழிலாளர்கள் கோடீஸ்வரர்கள் ஆகிவிட்டனர்.
இங்கு பா.ஜ.க. ஆட்சி அமைந்தால், சத்தீஸ்கரை போன்று, நெல் பயிருக்கு குவிண்டாலுக்கு 3,100 ரூபாயாக உயர்த்துவோம் என்பது மோடியின் உத்தரவாதம். இன்னும் 2 நாட்களில் நெற்பயிர்க்கான பணம் விவசாயிகளுக்கு வரவு வைக்கப்படும்.
இவ்வாறு மோடி பேசினார்.