ஐ.பி.எல் வீரர்கள் ஏலம் நாளை துபாயில் நடைபெறுகிறது

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 16 சீசன்கள் முடிந்துள்ளது.

17-வது ஐ.பி.எல். போட்டி அடுத்த ஆண்டு மார்ச் 23-ந்தேதி முதல் மே 29-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு அணியும் தங்களது விடுவிக்கப்பட்ட வீரர்கள் விவரத்தை ஏற்கனவே அறிவித்துவிட்டன.

இதேபோல டிரேடிங் முறையில் வீரர்களை அணிகள் தங்களுக்குள் மாற்றிக் கொண்டனர். குஜராத் டைட்டன்சை சேர்ந்த ஹர்திக் பாண்ட்யா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாற்றப்பட்டார். அவர் மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

ஐ.பி.எல். போட்டிக்கான மினி வீரர்கள் ஏலம் துபாயில் நாளை (19-ந்தேதி) நடக்கிறது. இந்திய நேரப்படி மதியம் 1 மணிக்கு ஐ.பி.எல். ஏலம் தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இது நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஐ.பி.எல். ஏலப் பட்டிய லில் மொத்தம் 333 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள். 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். அசோசியேட் நாடுகளில் இருந்து 2 வீரர்கள் இதில் இடம் பெற்றுள்ளனர்.

மொத்தம் 77 வீரர்கள் ஏலம் எடுக்கப்படுவார்கள். இதில் 30 பேர் வெளிநாட்டவர்களுக்கான இடமாகும். 10 அணிகளும் 77 வீரர்களை தேர்வு செய்வதற்காக மொத்தம் ரூ.262.95 கோடியை கைவசம் வைத்துள்ளன.  பேட்ஸ்மேன்கள், ஆல்ரவுண்டர்கள், பவுலர்கள், விக்கெட் கீப்பர் என பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வீரர்கள் ஏலம் விடப்படுகிறார்கள். 23 வீரர்களுக்கு அடிப்படை விலை யாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 13 வீரர்களுக்கு அடிப்படை விலை ரூ.1½ கோடியாகும்.

ஐ.பி.எல். ஏலத்தில் அதிக விலைக்கு போகப் போகும் வீரர் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டார்க், கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா), ரச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து), கோயட்சி (தென்ஆப்பிரிக்கா), ஹசரங்கா (இலங்கை). ஹர்ஷல் படேல், ஷாருக்கான் (இந்தியா) ஆகியோர் மீது இந்த ஏலத்தில் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports