X

ஐ.பி.எல் விளையாட்டில் ரூ.41 ஆயிரம் கோடி முதலீடு செய்ய விரும்பும் சவுதி அரேபியா

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டித்தொடர் இந்தியாவில் 2008-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆண்டு தோறும் இப்போட்டி தொடர் நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை 16 சீசன்கள் நடந்து உள்ளது. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ள ஐ.பி.எல். தொடர் மிகப்பெரிய வர்த்தகமாக விளங்குகிறது. அதன் மதிப்பும் அதிகமாகி வருகிறது. இந்த நிலையில் ஐ.பி.எல்லில் முதலீடு செய்ய சவுதி அரேபியா விருப்பம் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியா கால்பந்து மற்றும் கோல்ப் உள்ளிட்ட விளையாட்டுகளில் முதலீடுகளை செய்து உள்ளது. இதற்கிடையே சவுதி அரேபியா நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் ஆலோசகர்கள், ஐ.பி.எல். அதிகாரிகளை தொடர்பு கொண்டு இந்த கட்டமைப்பை 30 பில்லியன் டாலர் (ரூ.2.5 லட்சம் கோடி) மதிப்புள்ள ஹோல்டிங் நிறுவனமாக மாற்றுவது குறித்து ஆலோசனை வழங்கியுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் முகமது பின் சல்மான் இந்தியாவுக்கு வந்த போது, ஐ.பி.எல். நிறுவனத்தில் முதலீடு செய்வது குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த முதல்கட்ட பேச்சுவார்த்தையில் சவுதி அரேபியா அரசு இங்கிலீஷ் பிரீமியர் லீக் அல்லது ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்கைப் போலவே, ஐ.பி.எல். அமைப்பில் சுமார் 5 பில்லியன் டாலரை (ரூ.41 ஆயிரம் கோடி) முதலீடு செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்து ஐ.பி.எல். கட்டமைப்பை மற்ற நாடுகளுக்கு ஐ.பி.எல். கிரிக்கெட்டை விரிவாக்கம் செய்வதற்கு உதவும் வகையில், பில்லியன் டாலர் முதலீடு செய்ய சவுதி தயாராக இருப்பதாக பேச்சுவார்த்தையின்போது தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சவுதி அரேபியா அரசு ஐ.பி.எல். அமைப்பில் 5 பில்லியன் டாலர் முதலீடு செய்ய தயாராக இருப்பதாக முடிவு செய்தாலும், மத்திய அரசும், இந்திய கிரிக்கெட் வாரியமும் முடிவு எடுக்க செய்ய வேண்டும்.

Tags: tamil sports