ஐ.பி.எல் கிரிக்கெட் – ராஜஸ்தானை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின.
டாஸ் வென்ற கொல்கத்தா அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் சேர்த்தது.
அதிகபட்சமாக கேப்டன் சஞ்சு சாம்சன் 54 ரன்கள் சேர்த்தார். இதில் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். ஜாஸ் பட்லர் 22 ரன்களும், ரியான் பராக் 19 ரன்களும் சேர்த்தனர்.
கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ஹெட்மயர், 13 பந்துகளில் 1 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 27 ரன்கள் (நாட் அவுட்) விளாசினார்.
கொல்கத்தா தரப்பில் டிம் சவுத்தி 2 விக்கெட் கைப்பற்றினார். உமேஷ் யாதவ், அனுகுல் ராய், ஷிவம் மவி தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணியில் ஆரோன் பிஞ்ச் 4 ரன்னுடன் வெளியேற பாபா இந்திரஜித் 15 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 34 ரன்கள் எடுத்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த நிதிஷ்ராணா, ரிங்குசிங்கும் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். நிதிஷ்ராணா 48 ரன்களும், ரிங்குசிங் 42 ரன்களும் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தனர்.
19.1 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்ததுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.