X

ஐ.பி.எல் கிரிக்கெட் – பெங்களூரை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 34வது ஆட்டம் மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, ஐதராபாத் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல்
68 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பிரபுதேசாய் 15 ரன்களும், பிளென் மேக்ஸ்வெல் 12 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.

ஐதராபாத் தரப்பில் மார்கோ ஜான்சன், நடராஜன் தலா 3 விக்கெட் கைப்பற்றினர். ஜெகதீசா சுசித் 2 விக்கெட் எடுத்தார்.

இதையடுத்து 69 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணியின் துவக்க வீரர்கள் அபிஷேக் சர்மா, கேப்டன் வில்லியம்சன் இருவரும் சிறப்பான ஆட்டத்தை
வெளிப்படுத்தி வெற்றிக்கு வழிவகுத்தனர். விக்கெட் இழப்பின்றி வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த நிலையில், 64 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார். அவர் 28 பந்துகளில்
8 பவுண்டரி ஒரு சிக்சருடன் 47 ரன்கள் சேர்த்தார்.

அவரைத் தொடர்ந்து ராகுல் திரிபாதி களமிறங்க, ஐதராபாத் அணி 8 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது. அந்த ஓவரின் கடைசி பந்தில் சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தார் திரிபாதி. ஒரு
விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்த ஐதராபாத் அணி, 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐதராபாத் அணி, 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2வது இடத்தில்
உள்ளது.