Tamilவிளையாட்டு

ஐ.பி.எல் கிரிக்கெட் – பஞ்சாப்பை வீழ்த்தி டெல்லி வெற்றி

ஐபிஎல் தொடரின் 64-வது லீக் ஆட்டம் மும்பையில் நடைபெற்றது. இதில் டெல்லி கேபிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து களம் இறங்கிய டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். பின்னர் சர்பராஸ் கானுடன் மிட்செல் மார்ஷ் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அணியின் எண்ணிக்கை 51 ஆக இருந்தபோது சர்பராஸ் கான் 32 ரன்னில் ஆட்டமிழந்தார். லலித் யாதவ் 24 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய மிட்செல் மார்ஷ் அரை சதமடித்து 63 ரன்னில் வெளியேறினார்.  டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது.

பஞ்சாப் அணி சார்பில் லிவிங்ஸ்டோன், அர்ஷ்தீப் சிங் தலா 3 விக்கெட்டையும், ரபாடா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோவ் 28 ரன்களும், ஷிகர் தவான் 19 ரன்களும் அடித்தனர். பானுகா ராஜபக்சே 4 ரன்னுடன், லிவிங்ஸ்டோன் 3 ரன்னுடன் வெளியேறினர்.

கேப்டன் மயங்க் அகர்வால் ரன் எதுவும் எடுக்காத நிலையில் விக்கெட்டை இழந்தார்.  பொறுப்புடன் விளையாடிய ஜிதேஷ் சர்மா  44 ரன்கள் எடுத்தார். ராகுல் சாஹர் 25 ரன்கள் அடித்து களத்தி இருந்தார். 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் அடித்தது.

இதையடுத்து 17 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.  அந்த அணி சார்பில் அதிகபட்சமாக ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட்களையும், அக்சர் படேல் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.