ஐ.பி.எல் கிரிக்கெட் – டெல்லியை வீழ்த்தி பெங்களூர் வெற்றி
ஐபிஎல் தொடரின் 27வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி
அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் அனுஜ் ராவத் டக் அவுட்டானார். கேப்டன் டு பிளசிஸ் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய விராட் கோலி 12
ரன்னில் வெளியேறினார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மேக்ஸ்வெல் அரை சதமடித்து 55 ரன்னில் அவுட்டானார். பிரபு தேசாய் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி
பவுண்டரி, சிக்சர்களாக விளாசி அரை சதம் கடந்தார்.
இறுதியில், பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களை எடுத்தது. தினேஷ் கார்த்திக் 66 ரன்னும், ஷாபாஸ் அகமது 32 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில்
இருந்தனர்.
இதையடுத்து 190 ரன்கள் என்ற இலக்கை நோக்கி டெல்லி அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் பிரிதிவி ஷா 16 ரன் எடுத்த நிலையில் அவுட்டானார். மற்றொரு துவக்க வீரர் டேவிட்
வார்னர் அதிரடி காட்டினார். 38 பந்துகளில் 66 ரன் குவித்த நிலையில் அவர் விக்கெட்டை பறிகொடுத்தார்.
கேப்டன் ரிஷப் பண்ட் 34 ரன்கள் எடுத்தார். டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் அடித்தது. இதையடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது