ஐ.பி.எல் கிரிக்கெட் – சென்னை, பஞ்சாப் இன்று மோதல்
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 வெற்றி, 5 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது.
சென்னை அணி தொடக்க போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்சிடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சிடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 3-வது
போட்டியில் பஞ்சாப் கிங் சிடம் 54 ரன் வித்தியாசத்திலும், 4-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்திடம் 8 விக்கெட்டிலும் தோற்றது.
5-வது ஆட்டத்தில் பெங்களூர் அணியை 23 ரன்னில் வென்றது. 6-வது போட்டியில் குஜராத் டைட்டன்சிடம் 3 விக்கெட்டில் தோற்றது. 7-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை 3 விக்கெட் வித்தியாசத்தில்
வீழ்த்தியது.
சி.எஸ்.கே. அணி 8-வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்சை இன்று சந்திக்கிறது. இந்தப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப்பை தோற்கடித்து 3-வது வெற்றியை பெறுமா? என்று எதிர் பார்க்கப்படுகிறது. எஞ்சிய ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி
பெற்றால் தான் பிளே ஆப் சுற்று வாய்ப்பில் இருக்க முடியும் என்ற நெருக்கடியில் சி.எஸ்.கே. உள்ளது.
பஞ்சாப்பிடம் ஏற்கனவே தோற்று இருந்ததால் அதற்கு பதிலடி கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. மும்பைக்கு எதிராக டோனி சிறப்பாக விளையாடி ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.
அந்தப் போட்டியில் சென்னை அணியின் பீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. அதை சரி செய்வது அவசியமாகும்.
மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை அணியை மீண்டும் வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
இரு அணிகளும் வெற்றிக்கு கடுமையாக போராடுவார்கள் என்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.