Tamilவிளையாட்டு

ஐ.பி.எல். கிரிக்கெட் – சி.எஸ்.கே, சன்ரைசர்ஸ் அணிகள் இன்று மோதல்

சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இதுவரை 12 முறை மோதியுள்ளன. இதில் 75 சதவீத போட்டிகளில் அதாவது 9 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே வெற்றி வாகை சூடியுள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 3 முறைதான் வெற்றி பெற்றுள்ளது.

போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுவதால் பழைய சாதனைகளை எடுத்துக்கொள்ள முடியாது. சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங், பந்து வீச்சு என இரண்டிலும் சொதப்பி வருகிறது.

மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலங்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு எதிராக நெருக்கடி கொடுக்கும் அளவிற்கு விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி அணிக்கெதிராக 176 ரன்களை சேஸிங் செய்யும்போது எந்தவிதமான பேராட்டமின்றி 131 ரன்கள் மட்டுமே எடுத்து சரணடைந்தது.

இந்த தோல்வி டோனியை யோசிக்க வைத்துள்ளது. ஐதுராபாத் போட்டிக்கு ஒருவாரம் இடைவெளி இருந்ததால், பேலன்ஸ் அணியை தயார் செய்தல், திட்டமிடல் ஆகியவற்றிற்கு நேரம் கிடைத்திருக்கும். தொடக்க ஜோடியை மாற்ற வேண்டுமா?. இம்ரான் தாஹிரை அணியில் சேர்க்கவா? என்பது குறித்து யோசித்திருப்பார்.

பேட்டிங்கில் தொடக்க வீரர்களால் எந்த பயனும் இல்லை. மும்பைக்கு எதிராக முரளி விஜய் – வாட்சன் ஜோடி 5 ரன்களும், ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு 56 ரன்களும், டெல்லிக்கு எதிராக 23 ரன்களுமே எடுத்தன. இதில் முரளி விஜய் 1, 21, 10 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துள்ளார். வாட்சன் 4, 33, 14 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.

கடைசியாக துபாயில் நடைபெற்ற டெல்லி அணிக்கெதிராக 176 இலக்கை நோக்கி பேட்டிங் செய்யும்போது எந்தவித நெருக்கடியும் கொடுக்க முடியாமல் 131 ரன்னில் சுருண்டு சரணடைந்தது.

இந்த போட்டியில் டோனி 6-வது வீரராக களம் இறங்கி 15 ரன்களே அடித்தார். இரண்டு போட்டிகளில் ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இரண்டிலும் 0, 5 என அவுட் ஆகி அவரும் பிரகாசிக்கவில்லை.

கேதர் ஜாதவ் ரோல் என்ன என்பதை எம்எஸ் டோனிதான் விளக்க வேண்டும்.

டெல்லி அணிக்கெதிரான படுதோல்விக்குப் பிறகு, அம்பதி ராயுடு அடுத்த போட்டியில் விளையாடுவார். அணி சற்று பேலன்ஸ் பெறும், சரியான பார்வையுடன் களம் இறங்குவோம் என்று டோனி தெரிவித்தார். இதனால் அணியில் மாற்றங்கள் பல இருக்கலாம். ஒரு வாரத்திற்குப்பின் போட்டியில் களம் இறங்குவதால் இந்த ஓய்வு நேரத்தில் மாற்றங்கள் குறித்து டோனியும், ஸ்டீபன் பிளமிங்கும் யோசித்திருப்பார்கள்.

இப்போது ரசிகர்களின் கேள்வியே, டோனி 4-வது அல்லது ஐந்தாவது இடத்தில் களம் இறங்குவாரா? என்பதுதான். முதல் இரண்டு போட்டிகளில் ஏழாவது இடத்திலும், 3-வது போட்டியில் 6-வது இடத்திலும்தான் களம் இறங்கினார். அது அணிக்கு எந்த பலனையும் கொடுக்கவில்லை.

டு பிளிஸ்சிஸ் 3-வது இடத்தில் தனது திறமையை நிரூபித்துள்ளார். 58, 72, 43 என அடித்துள்ளார். சாம் கரன் சிறப்பாக பந்து வீசுவதோடு, அவரால் முடிந்த அளவிற்கு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்.

தொடக்க ஜோடியை டோனி மாற்ற வாய்ப்புள்ளது. முரளி விஜய் நீக்கப்பட்டு அம்பதி ராயுடு அல்லது டு பிளிஸ்சிஸ் களம் இறக்கப்படலாம். வாட்சன் மீது நம்பிக்கை வைத்து டோனி இன்னும் வாய்ப்பு கொடுப்பார்.

துபாய் மைதானத்தில் இரண்டு அணிகளுமே 175 ரன்களுக்கு குறைவான ஸ்கோரை சேஸிங் செய்ய முடியாமல் தோற்றுள்ளது. இதனால் துபாய் ஆடுகளம் சற்று ட்ரிக் ஆனதாகவே உள்ளது. மேலும், இரண்டு அணிகளும் தலா ஒரு முறை மோதியுள்ளது. இரண்டு அணிகளும் தோல்வியையே சந்தித்துள்ளன.

தொடக்க ஜோடி ஓரளவிற்கு ரன்கள் அடிப்பதுடன் களத்தில் நிலைத்து நிற்பது அவசியம். முதல் 10 ஓவரில் 70 முதல் 80 ரன்கள் அடித்துவிட்டு, 15-வது ஓவருக்குப் பிறகு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினால் சென்னை அணி நல்ல ஸ்கோரை எட்ட வாய்ப்புள்ளது. இதற்கு டோனி, கேதர் ஜாதவ் பங்களிப்பு மிகமிக அவசியம்.

தொடக்க ஜோடி யார்? டோனி எந்த ஆர்டரில் களம் இறங்குவார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

பந்து வீச்சை பொறுத்த வரைக்கும் தீபக் சாஹர் தனது 100 சதவீத முழுத்திறமையையும் இன்னும் வெளிப்படுத்தவில்லை. புதுப்பந்தை ஸ்விங் செய்வதில் வல்லவர். ஆனால் மும்பை, ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி அணிக்கெதிராக பவர் பிளே-யில் ஒரேயோரு விக்கெட் மட்டுமே கைப்பற்றியுள்ளார். மேலும், 32, 31, 38 என ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். இவர் பவர் பிளே-யில் அசத்தினால் மட்டுமே எதிரணியை கட்டுப்படுத்த முடியும். சாம் கர்ரன் வெயின் பிராவோ செய்த பணியை செம்மையாக செய்து வருகிறார்.

மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான நிகிடி அல்லது ஹாசில்வுட் ரன்களை கட்டுப்படுத்துவது அவசியம். முதல் போட்டியில் நிகிடி சிறப்பாக பந்து வீசினார். ஆனால், ராஜஸ்தானுக்கு எதிராக கடைசி ஓவரில் தொடர்ந்து 4 சிக்சர்கள் கொடுத்தது அணிக்கு பின்னடைவை கொடுத்தது. அவருக்குப் பதிலாக டெல்லி அணிக்கெதிராக ஹாசில்வுட் சேர்க்கப்பட்டார். அவர் 28 ரன்கள் கொடுத்தாலும், விக்கெட் வீழ்த்தவில்லை. இவர்களில் யாரவது ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சுழற்பந்து வீச்சை பொறுத்த வரைக்கும் பியூஷ் சாவ்லா, ஜடேஜா என இரண்டு பேர் மட்டுமே உள்ளது. இந்த ஜோடி முதல் போட்டியில் 63 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும், 2-வது போட்டியில் 95 ரன்களும், 3-வது போட்டியில் 77 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளது.

இதனால் சுழற்பந்து வீச்சு கவலை அளிக்கும் வகையில் உள்ளது. சுழற்பந்து வீச்சில் இம்ரான் தாஹிரை சேர்க்க வேண்டும் என்றால், அணியில் மிகப்பெரிய சீர்திருத்தம் செய்ய வேண்டியிருக்கும். வெளிநாட்டு வேகபந்து வீச்சாளரை நீக்கி விட்டு, இந்திய பந்து வீச்சாளரை சேர்க்க வேண்டும். அப்படி என்றால் ஒரு இந்திய பேட்ஸ்மேனை நீக்க வேண்டியிருக்கும். மேலும், ஐந்து பந்து வீச்சாளர்களுடன் மட்டுமே விளையாடுவது சற்று பின்னடைவாகவே உள்ளது.

இந்த ஒரு வாரத்தில் சரியான பேலன்ஸ் அணியை தேர்வு செய்வது குறித்துதான் டோனி யோசித்திருப்பார். ஏறக்குறைய இந்த முறை சரியான அணியை களம் இறக்கினால் அதன்பின் மாற்றம் பெரிய அளவில் இருக்காது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த நிலையில், கடைசியாக விளையாடிய டெல்லி அணிக்கு எதிராக வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் வார்னர், பேர்ஸ்டோவ், புவனேஷ்வர் குமார், ரஷித் கான் என அணியின் முக்கியமான வீரர்களின் பங்களிப்பு அபாரமாக இருந்தது.

முதல் இரண்டு போட்டியில் வார்னர் (6), (36) என ஆட்டமிழந்தார். டெல்லிக்கு எதிராக 33 பந்தில் 45 ரன்கள் விளாசினார். அதேபோல் பேர்ஸ்டோவ் முதல் போட்டியில் அரைசதமும், 3-வது போட்டியில் அரைசதம் அடித்துள்ளார். இருவரும் மிகப்பெரிய ஹிட்டர்கள். அதோடு மட்டுமல்லாமல் ஸ்டிரைக் ரொட்டேட் செய்வதில் வல்லவர்கள்.

துபாய் மைதானம் மிகப்பெரியது என்பதால் அவ்வப்போது பவுண்டரிகள் அடிப்பதுடன், ஒன்றிரண்டு ரன்கள் திரட்டி விடுவார்கள். இவர்களை நீண்ட நேரம் களத்தில் நின்று விட்டால் சென்னை அணியால் கட்டுப்படுத்துவது சுலபம் அல்ல. மிடில் ஆர்டர் வலுவிழந்து காணப்பட்டதால் 3-வது போட்டியில் கேன் வில்லியம்சனை களம் இறக்கியது. அவர் 26 பந்தில் 41 ரன்கள் அடித்து அணிக்கு நம்பிக்கை ஊட்டினார். 3-வது இடத்தில் களம் இறங்கும் மணிஷ் பாண்டே அந்த அணிக்கு பக்கபலமாக உள்ளார். இந்த நான்கு பேரும்தான் அணியின் பேட்டிங் முதுகெலும்பு. 10 ஓவருக்குள் மூன்று பேரை சாய்ந்துவிட்டால், மொத்த அணியும் சாய்ந்ததற்கு சமம்.

பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார், ரஷித் கான் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம். தற்போது டி. நடராஜனும் அவர்களுடன் இணைந்துள்ளார். இந்த மூன்று பேரும் இணைந்து டெல்லிக்கு எதிராக அற்புதமாக பந்து வீசினார்கள். புதுப்பந்தில் புவி அசத்துவார். முதல் இரண்டு போட்டிகளில் ஏமாற்றம் அளித்த புவி, டெல்லிக்கு எதிராக 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். இது அவருக்கு உத்வேகத்தை கொடுத்திருக்கும்

அதேபோல் ரஷித் கானும் முதல் இரண்டு போட்டிகளில் 31, 25 ரன்கள் விட்டுக்கொடுத்தார். டெல்லிக்கு எதிராக 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் அள்ளி ஆட்ட நாயகன் விருது பெற்றார். ரஷித் கானுக்கு இந்த போட்டி ஊக்கத்தை கொடுக்கும். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தக் கூடியர். இவரை சரியாக எதிர்கொண்டால்தான் மிடில் ஆர்டரில் ரன்கள் சேர்க்க முடியும்.

தற்போது இவர்களுடன் தமிழகத்தை சேர்ந்த டி நடராஜன் இணைந்துள்ளார். இவர் ஒரு யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட். இந்த சீசனில் யார்க்கர் டெலிவரியை சரியான முறையில் நடைமுறைப்படுத்தி வருகிறார். இவர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்.

ரஷித் கான், புவி பந்து வீச்சை எதிர்கொள்வது, பேர்ஸ்டோவ், வார்னரை கட்டுப்படுத்துவதை பொறுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றித் தோல்வி அமையும்.