ஐ.பி.எல். எனக்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளது – ஹர்திக் பாண்ட்யா நெகிழ்ச்சி பதிவு
2024 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று (மார்ச் 22) துவங்கியது. பிரமாண்ட துவக்க விழாவை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இந்த சீசனின் முதல் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின.
இந்த நிலையில், ஐ.பி.எல். தொடர் துவங்கும் முன்பு பல அணிகளின் கேப்டன்கள் மாற்றப்பட்டனர். எனினும், மும்பை மற்றும் சென்னை அணிகளின் கேப்டன்கள் மாற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக ரோகித் சர்மா நீக்கப்பட்டு, ஹர்திக் பாண்ட்யா அந்த அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.
மும்பை அணியின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. கேப்டன் மாற்றப்பட்ட காரணத்தால், மும்பை இந்தியன்ஸ் அணியின் சமூக வலைதள அக்கவுண்ட்களின் ஃபாளோவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.
அந்த வகையில் ஐ.பி.எல். போட்டிகள் துவங்கும் முன்பு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஐ.பி.எல். எனக்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளது. ஐ.பி.எல். எனக்கு அடையாளத்தை கொடுத்துள்ளது. ஐ.பி.எல். இல்லையெனில் நான் பரோடாவில் இருந்திருப்பேன். ஆனால் இந்த நிலையில் இருந்திருக்க மாட்டேன். அங்கு வேறொரு ஹர்திக் இருந்திருப்பார்,” என்று தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.