ஐ.எஸ். பயங்கரவாத இயக்கமும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் ஒன்றே என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
இதுகுறித்து பழம்பெரும் ஆர்.எஸ்.எஸ். இயக்க தொண்டரும், பா.ஜனதா மூத்த தலைவருமான இல.கணேசன் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களுக்கு தேச விரோதிக்கும், தேச பக்தருக்கும் வித்தியாசம் தெரியாது. அழகிரியும் அந்த பட்டியலில் இருப்பவர்தான்.
பாரத நாட்டில் கொள்கை ரீதியாக வேறுபட்டவர்கள் கூட தேசபக்திக்கும், ஒழுக்கத்துக்கும், கட்டுப்பாட்டுக்கும் உதாரணமான இயக்கம் ஆர்.எஸ்.எஸ். என்று புகழ்ந்து இருக்கிறார்கள்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பாராட்டி இருக்கிறார். பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். மாநாட்டுக்கு நேரில் சென்று பாராட்டினார். அழகிரி விவரம் தெரியாமல் பேசி இருப்பாரா என்பது சந்தேகம்.
ஆர்.எஸ்.எஸ்.ஐ. குற்றம் சாட்டுவது போல் குற்றம் சாட்டி ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை புகழுவதற்காக அப்படி பேசி இருக்கலாம்.
இஸ்லாமிய சமுதாயத்தை பார்த்ததும் சில தலைவர்கள் நிலைதடுமாறுவார்கள். கமலும் அப்படி தடுமாறியதன் விளைவுதான் அவரது அர்த்தமற்ற பேச்சு.
மகாத்மா காந்தியை கொன்றவர் கோட்சேதான். அதற்கு புலனாய்வு அவசியமில்லை. சுட்டுவிட்டு அப்படியே நின்றுவிட்டார். அவர் கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர். அதை ‘இந்து’ என்ற வார்த்தையை நினைவு படுத்தினால் தான் கோட்சே நினைவுக்கு வருவாரா?
அப்படியானால் காந்தி யார்? அவரும் நல்ல இந்து தானே! கோட்சே பற்றி மட்டும் இந்து என்ற வார்த்தையை சேர்ப்பது ஏன்? இது பொருத்தமற்ற வார்த்தை. சூடான ஐஸ்கிரீம் என்பதுபோல் இந்து ஒரு போதும் பயங்கரவாதி ஆக முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.