ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் – இறுதி போட்டிக்கு கேரளா முன்னேற்றம்
கோவாவில் நடைபெற்று வரும் 8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர், இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த தொடரில், புள்ளிகளின் அடிப்படையில், ஜாம்ஷெட்பூர், ஐதராபாத் , ஏ.டி.கே.மோகன் பகான் , கேரளா பிளாஸ்டர்ஸ் ஆகிய நான்கு அணிகள் அரை இறுதி போட்டிகளில் விளையாட தகுதி பெற்றிருந்தன.
இதில் ஒவ்வொரு அணியும் இரண்டுமுறை அரையிறுதி போட்டிகளில் எதிர் அணியுடன் மோத வேண்டும். இதன் முடிவில் வெற்றி அல்லது கோல் வித்தியாசத்தில் முன்னிலை பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
அதன்படி முதலாவது அரையிறுதி சுற்றில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது.
நேற்று மீண்டும் இரு அணிகளும் 2வது அரையிறுதி சுற்றில் மோதின. இந்த ஆட்டத்தை கேரளா டிரா செய்தாலே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற நிலை இருந்தது.
போட்டி தொடங்கிய 18-வது நிமிடத்தில் கேரளா வீரர் லூனா முதல் கோல் அடித்தார். 50-வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணி வீரர் ஹால்டேர் ஒரு கோல் அடித்தார்.
அதன் பிறகு ஆட்டம் முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்காத காரணத்தால் போட்டி சமனில் முடிந்தது. முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்த கேரள அணி 2வது போட்டியை சமன் செய்ததால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதி சுற்றில் ஏ.டி.கே.மோகன் பகான்- ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.