ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் சென்னை அணி சிறப்பாக விளையாடும் – தமிழக வீரர் எட்வின் நம்பிக்கை
7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் வருகிற 20-ந் தேதி தொடங்குகிறது. இதில் 3 முறை சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கத்தா, 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி., ஒரு முறை சாம்பியன் பெங்களூரு உள்பட 11 அணிகள் கலந்து கொள்கின்றன. புதிய அணியாக ஈஸ்ட் பெங்கால் இடம் பெறுகிறது. ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங் களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
கொரோனா பிரச்சினை காரணமாக இந்த சீசனுக்கான ஆட்டங்கள் அனைத்தும் கோவா வில் உள்ள 3 ஸ்டேடியங்களில் அரங்கேறுகிறது. கொரோனா தடுப்பு உயிர் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நடைபெறும் இந்த போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது. தொடக்க லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்- அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. சென்னையின் எப்.சி. அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வருகிற 24-ந் தேதி ஜாம்ஷெட்பூர் அணியை சந்திக்கிறது.
இந்த போட்டி தொடருக்காக சென்னையின் எப்.சி. அணி கடந்த மாதமே கோவா சென்று பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த சீசனுக்கான போட்டி குறித்து சென்னையின் எப்.சி. அணியில் அங்கம் வகிக்கும் நெய்வேலியை சேர்ந்த 28 வயது நடுகள வீரரான எட்வின் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டுக்கான போட்டி கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெறுகிறது. தனிமைப்படுத்துதல் உள்பட கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி பயிற்சி மேற்கொண்டு வருகிறோம். வாரத்தில் 2 முறை கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. கடந்த சீசனுக்கான இறுதிப்போட்டி (மார்ச் மாதம் நடந்தது) கொரோனா பரவல் காரணமாக ரசிகர்கள் இன்றி தான் நடந்தது. இந்த முறையும் ரசிகர்கள் முன்னிலையில் விளையாட முடியாமல் போவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. ரசிகர்களின் பாராட்டு வீரர்களுக்கு மிகுந்த சக்தியும், ஊக்கமும் அளிக்கக்கூடியதாகும். அதேநேரத்தில் ரசிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டியது முக்கியமானதாகும்.
கால்பந்து ஆட்டத்தை பொறுத்தமட்டில் எந்த அணி பட்டம் வெல்லும் என்று எளிதில் கணிக்க முடியாது. இந்த போட்டி தொடரில் பங்கேற்கும் எல்லா அணிகளும் சவாலானதாகும். எனவே போட்டி தொடர் கடுமையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். கொரோனா ஊரடங்கு காரணமாக சுமார் 4 மாதம் பயிற்சியில் ஈடுபட முடியாமல் போனாலும், கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இந்த போட்டிக்காக நாங்கள் சிறப்பாக தயாராகி நல்ல நிலையில் இருக்கிறோம். அணியில் காயம் பிரச்சினை எதுவும் இல்லை. கடந்த சீசனை போல் இந்த முறையும் எங்களால் நிச்சயம் களத்தில் சிறப்பாக செயல்பட முடியும். ஏனெனில் அந்த அளவுக்கு நாங்கள் நன்றாக தயாராகி இருக்கிறோம். எங்களது முழு சக்தியை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை வெல்ல முயற்சிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.