ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் முதல் லீக் – கேரளா வெற்றி
6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் நேற்று தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி., சென்னையின் எப்.சி, அட்லெடிகோ டி கொல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ், எப்.சி.கோவா, நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), ஜாம்ஷெட்பூர், ஒடிசா எப்.சி. மும்பை சிட்டி, ஐதராபாத் எப்.சி. ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
கொச்சி நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்த தொடக்க விழாவில் கண்கவர்கலை நிகழ்ச்சிகள், நடனம் இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து இரவில் நடந்த முதலாவது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தாவை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 6-வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் கார்ல் மெக்ஹக் கோல் அடித்து குழுமியிருந்த 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளூர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். ஜாவியர் ஹெர்னாண்டஸ் கோல் பகுதிக்குள் தூக்கியடித்த பந்தை அகஸ்டின் இனிஹஸ் தலையால் முட்டி கார்ல் மெக்ஹக் பக்கம் திருப்பினார். அதை மெக்ஹக் லாவகமாக கோலுக்குள் உதைத்து தள்ளினார். ஐ.எஸ்.எல். வரலாற்றில் கொல்கத்தாவின் 100-வது கோல் இதுவாகும்.
பதிலடி கொடுக்க வரிந்து கட்டி நின்ற கேரளாவுக்கு 30-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை கேரளா கேப்டன் பார்தலோமேவ் ஒக்பேச் கோலாக்கினார். 45-வது நிமிடத்தில் பார்தலோமேவ் ஒக்பேச் மீண்டும் ஒரு கோல் போட்டு ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்க வைத்தார். கொல்கத்தா வீரர்கள் பந்தை கடத்தி கொடுத்த விதத்தில் நடந்த குளறுபடியை ஒக்பேச் சரியாக பயன்படுத்திக் கொண்டு அசத்தினார். இதனால் முதல் பாதியில் கேரளா 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
பந்து அதிகமான நேரம் கேரளா வசமே (54 சதவீதம்) சுற்றிக் கொண்டிருந்தது. பிற்பாதியில் இரண்டு அணி வீரர்களும் பலமாக முயற்சித்தும் மேற்கொண்டு கோல் ஏதும் விழவில்லை. முடிவில் கேரளா 2-1 என்ற கோல் கணக்கில் கொல்கத்தாவை சாய்த்து இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
பெங்களூருவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.-நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதுகின்றன.