Tamilவிளையாட்டு

ஐ.எஸ்.எல். கால்பந்து – சென்னை, ஒடிசா அணிகள் இன்று மோதல்

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) இரவு நடைபெறும் 26-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-ஒடிசா எப்.சி. அணிகள் மோதுகின்றன.

2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி தனது முதல் 4 ஆட்டங்களில் ஒரு டிரா, 3 தோல்வியை சந்தித்தது. சென்னை அணி இனிமேல் அவ்வளவு தான் என்று எல்லோரும் நினைத்த நிலையில் சொந்த மண்ணில் நடந்த முந்தைய லீக் ஆட்டத்தில் கடைசி கட்டத்தில் (இஞ்சுரி டைமில்) 2-1 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.

ஒடிசா அணி 5 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 2 டிரா, 2 தோல்வி கண்டுள்ளது. அந்த அணி தனது கடைசி 2 லீக் ஆட்டங்களில் தொடர்ச்சியாக (கேரளா, கொல்கத்தா அணிக்கு எதிராக) டிரா கண்டது. 2-வது வெற்றியை ருசிக்க இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

இந்த போட்டி குறித்து சென்னையின் எப்.சி. அணியின் பயிற்சியாளர் ஜான் கிரிகோரி நேற்று கருத்து தெரிவிக்கையில், ‘எனது முன்கள வீரர்களின் திறமை குறித்து நான் ஒருபோதும் சந்தேகம் கொண்டதில்லை. பயிற்சியில் அவர்கள் ஒவ்வொரு நாளும் கோல் அடிக்கிறார்கள். ஆந்த்ரே ஸ்கெம்பிரி, நெர்ஜூஸ் வல்ஸ்கிஸ் ஆகியோர் எங்கள் அணிக்கு வருவதற்கு முன்பே அவர்களின் திறமை குறித்து எனக்கு நன்கு தெரியும். பயிற்சி ஆட்டத்தில் நன்றாக விளையாடிய அவர்கள் ஐ.எஸ்.எல். போட்டியில் திறமையை நிரூபிக்கவில்லை. இது கவலை அளிப்பதாக இருந்தது. இருவரும் ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் தங்கள் தரத்தை வெளிப்படுத்தினார்கள். அவர்கள் மீதான நம்பிக்கையை நான் ஒருபோதும் இழக்கவில்லை. அவர்களது திறமை இன்னும் நிறைய வெளியாகும் என்று நம்புகிறேன்’ என்றார்.

இதற்கிடையே, கவுகாத்தியில் நேற்றிரவு நடந்த நார்த் ஈஸ்ட் யுனைடெட்- மும்பை சிட்டி அணிகள் இடையிலான ஆட்டம் 2-2 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. 4 கோல்களும் முதல் பாதியிலேயே அடிக்கப்பட்டது. பிற்பாதியில் யாரும் கோல் போடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *