7-வது ஐ.எஸ்.எல். (இந்தியன் சூப்பர் லீக்) கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. 11 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும்.
லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதிபெறும்.
நேற்று வரை 106 ஆட்டங்கள் முடிந்துவிட்டது. இதுவரை ஏ.டி.கே. மோகன் பகான், மும்பை ஆகிய இரண்டு அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இன்னும் நான்கு லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சி உள்ளன.
அரைஇறுதி போட்டிக்கான மற்ற இரண்டு இடங்களுககு கோவா எப்.சி., கவுகாத்தி (நார்த்ஈஸ்ட்), ஐதராபாத் ஆகிய அணிகள் இடையே போட்டி நிலவுகிறது.
இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் கவுகாத்தி – கேரளா அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் கவுகாத்தி அணி வெற்றி பெற்றால் அரைஇறுதிக்கு முன்னேறும். ஒருவேளை தோற்றால் கோவா- ஐதராபாத் அணிகள் மோதும் ஆட்டத்தில் முடிவு காத்திருக்கு வேண்டும்.
கோவா (3-வது இடம்), கவுகாத்தி (4-வது இடம்) தலா 30 புள்ளிகளுடன் உள்ளது. ஐதராபாத் அணி 28 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. லீக் ஆட்டங்கள் வருகிற 28-ந் தேதியுடன் முடிகிறது.