ஐ.எஸ்.எல் கால்பந்து – ஐதராபாத், கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி டிராவானது
10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நேற்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின.
ஆட்டத்தின் முதல் பாதியில் கொல்கத்தா அணியின் ராய் கிருஷ்ணா 15-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைக்கு கொண்டுவந்தார். இதற்கு பதிலடியாக ஐதராபாத் வீரர் போபோ 39வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து சமனிலைப்படுத்தினார். இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என சமனிலை பெற்றது.
இரண்டாவது பாதியில், ஐதராபாத் அணி வீரர் போபோ 85-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் ஐதராபாத் அணி வெற்றி பெறும் நிலையில் இருந்தது.
ஆனால், கடைசி கட்டத்தில் ஆட்டத்தின் 90வது நிமிடத்தில் கொல்கத்தா அணியின் ராய் கிருஷ்ணா ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமனிலைக்கு கொண்டு வந்தார்.
இறுதியில், ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி 2-2 என சமனில் முடிந்தது.
இதன்மூலம், கொல்கத்தா அணி தான் விளையாடிய 9 போட்டிகளில் 4 வெற்றி, 3 டிரா மற்றும் 2 தோல்வி என 15 புள்ளிகள் பெற்று 2வது இடத்தில் உள்ளது.