ஐ.எஸ்.எல் கால்பந்து – இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பெங்களூர் அணி

5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில், பெங்களூரு எப்.சி.- நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணிகள் இடையிலான அரைஇறுதியின் 2-வது சுற்று ஆட்டம் பெங்களூருவில் நேற்று இரவு நடந்தது. கவுகாத்தியில் நடந்த முதலாவது சுற்றில் பெங்களூரு எப்.சி. அணி கடைசி நிமிடத்தில் செய்த தவறால் 1-2 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியிடம் தோல்வி அடைந்தது. எனவே இந்த ஆட்டத்தில் குறைந்தது 2 கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பெங்களூரு அணியால் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடியுடன் களம் கண்டது. நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி ‘டிரா’ செய்தாலே இறுதிப்போட்டியை உறுதி செய்து விடலாம் என்ற நிலையில் களம் இறங்கியது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுக்கு மத்தியில் ஆடிய பெங்களூரு அணி கடைசி நேரத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தியது. முடிவில் பெங்களூரு அணி 3-0 என்ற கோல் கணக்கில் கவுகாத்தி அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. பெங்களூரு அணியில் மிகு 72-வது நிமிடத்திலும், டிமாஸ் டெல்காடோ 87-வது நிமிடத்திலும், சுனில் சேத்ரி 90-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். கவுகாத்தி அணியால் கடைசி வரை பதில் கோல் எதுவும் திருப்ப முடியவில்லை.

எப்.சி.கோவா-மும்பை சிட்டி எப்.சி. அணிகள் இடையிலான அரைஇறுதியின் 2-வது சுற்று ஆட்டம் கோவாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. மும்பையில் நடந்த முதல் சுற்றில் கோவா அணி 5-1 என்ற கோல் கணக்கில் மும்பையை வென்று இருந்தது. எனவே இன்றைய ஆட்டத்தில் மும்பை அணி 5 கோல்களுக்கு மேலான வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்குள் நுழைய முடியும்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news