X

ஐ.எஸ்.எல் கால்பந்து – இறுதிப் போட்டியில் சென்னை, கொல்கத்தா அணிகள் மோதல்

6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் கோவாவில் உள்ள ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் 2 முறை சாம்பியன்களான சென்னையின் எப்.சி.-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

லூசியன் கோயன் தலைமையிலான சென்னை அணி லீக் சுற்று முடிவில் 4-வது இடம் பிடித்தது. 2 ஆட்டங்கள் கொண்ட அரையிறுதி சுற்றில் சென்னை அணி 6-5 என்ற கோல் கணக்கில் கோவா எப்.சி.யை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

ராய் கிருஷ்ணா தலைமையிலான கொல்கத்தா அணி லீக் ஆட்டம் முடிவில் 2-வது இடம் பிடித்ததுடன், அரையிறுதி சுற்றில் 3-2 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி.யை வெளியேற்றி இறுதிப்போட்டியை எட்டியது.

2015, 2017-18-ம் ஆண்டுகளில் கோப்பையை வென்ற சென்னை அணி இந்த சீசனில் லீக் ஆட்டத்தில் சொந்த மண்ணில் 0-1 என்ற கோல் கணக்கில் கொல்கத்தாவிடம் தோல்வி கண்டது. ஆனால் அடுத்த லீக் ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் கொல்கத்தாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி பதிலடி கொடுத்தது. சென்னை அணியில் வல்ஸ்கிஸ் (14 கோல்கள்), கிரிவெல்லாரோ (7 கோல்கள்), சாங்தே (7 கோல்கள்) ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு அணியின் தூண்களாக திகழ்கிறார்கள்.

2014 மற்றும் 2016-ம் ஆண்டு சாம்பியனான கொல்கத்தா அணியில் அதிக கோல் அடித்த ராய் கிருஷ்ணா (15 கோல்கள்), டேவிட் வில்லியம்ஸ் (7 கோல்கள்), எடு கார்சியா (5 கோல்கள்), ஜாவியர் ஹெர்னாண்டஸ் உள்ளிட்டோர் நம்பிக்கை நட்சத்திரங்களாக மின்னுகிறார்கள். சென்னை, கொல்கத்தா அணிகள் இறுதிப்போட்டியில் சந்திப்பது இதுவே முதல்முறையாகும். இதுவரை இரு அணிகளும் தங்களது இறுதிப்போட்டியில் தோல்வி கண்டது கிடையாது. 3-வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைக்க இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்1 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இறுதிப்போட்டி ரசிகர்கள் இன்றி அரங்கேறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டி குறித்து சென்னை அணியின் பயிற்சியாளர் ஓவன் கோய்லே அளித்த பேட்டியில், ‘கொல்கத்தா அணி மீது எனக்கு அளவு கடந்த மரியாதை உள்ளது. அந்த அணி மிகவும் திறமையான வீரர்களை கொண்டதாகும். நாங்கள் எப்பொழுதும் போல் எங்கள் பாணியிலேயே விளையாடுவோம். ஏனெனில் அதனை வைத்து தான் நாங்கள் நிறைய வெற்றிகளை பெற்றுள்ளோம். எங்களுக்கு நெருக்கடி இருப்பது உண்மை தான். அதேசமயத்தில் நாங்கள் எத்தகைய சவாலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்’ என்றார்.

கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் ஆன்டானியோ லோபெஸ் ஹபாஸ் கூறுகையில், ‘இறுதிப்போட்டியில் நாங்கள் உற்சாகமாக அனுபவித்து விளையாடி கோப்பையை வெல்ல முயற்சிப்போம். சில வீரர்களுக்கு இறுதிப்போட்டியில் விளையாட அடுத்த வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். எனவே இறுதிப்போட்டியில் வாகை சூட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் செயல்படுவோம்’ என்றார்.

Tags: sports news