Tamilசெய்திகள்

ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கு – சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை தொடக்கம்

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு நேற்று முன்தினம் தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியது. இதைத்தொடர்ந்து, சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்வதற்காக டெல்லி ஜோர் பாக் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை.

இந்த நிலையில், தேடப்படும் நபர் என்ற வகையில் ப.சிதம்பரத்துக்கு எதிராக சி.பி.ஐ. சார்பிலும், அமலாக்கப்பிரிவு சார்பிலும் ‘லுக் அவுட்’ நோட்டீஸ் நேற்று பிறப்பிக்கப்பட்டது.

இதற்கிடையே, ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து ப.சிதம்பரம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது உடனடியாக விசாரணை நடத்தப்படாததால் ப.சிதம்பரத்திற்கு மேலும் சிக்கல் ஏற்பட்டது. நேற்று இரவு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பேட்டி அளித்து விட்டு வீட்டுக்கு வந்த ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

ப.சிதம்பரத்திடம் இன்று காலை முதலே சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பிறகு இன்று பிற்பகல் டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது ப.சிதம்பரம் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படும். அதேசமயம், ப.சிதம்பரத்தை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. சார்பில் மனு தாக்கல் செய்யப்படலாம்.

சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைத்தாலும், அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில் அவரை கைது செய்ய அதிகாரிகள் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *