சிவகங்கை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சிவகங்கை தொகுதி மேம்பாட்டில் அக்கறை செலுத்த வேண்டும் என்ற நீதிமன்றத்தின் அறிவுறுத்தல் ஏற்கத்தக்கது. காங்கிரஸ் கட்சி தமிழர்களின் கருத்துக்கு மதிப்பளித்து பாராளுமன்றத்தில் செயலாற்றும்.
தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளுக்காக குரல் கொடுப்போம். ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் எனக்கு தொடர்பு இல்லை.
காங்கிரஸ் கட்சி தமிழகம் மற்றும் கேரளாவில் மகத்தான வெற்றி பெற்றுள்ளது. வட மாநிலங்களில் தோல்வியை தழுவியுள்ளது. தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜமான ஒன்று தான். காங்கிரஸ் காரிய கமிட்டி தோல்விக்கான காரணம் குறித்து ஆராயும்.
காவிரி விவகாரத்தில் காவிரி ஆணையம் அமைத்த உத்தரவை மதிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எனது முழு ஆதரவு உண்டு.
நாட்டில் எதிர்க்கட்சி என்பதே இல்லை. ஒரு அரசாங்கம் மட்டும் தான் இருக்கிறது. என்னை கட்சி சார்பாக பார்க்காமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி என்று தான் பார்க்க வேண்டும்.
அரசாங்கம் கட்சி சார்பை விடுத்து பொதுமக்கள் அனைவருக்கும் சேவை செய்வதாக இருக்க வேண்டும்.
ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக தொடர வேண்டும் என்பது தான் எங்களின் ஒருமித்த கருத்தாகும். அவரே கட்சியின் தலைவராக தொடர்ந்து செயல்படுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.