மெட்ராஸ் வணிக மையமாகத் தொடங்கப்பட்டபோது ஆரம்பப் பரிவர்த்தனைகள் ஜவுளியில் மட்டுமே நடந்தன. சில ஆண்டுகளில் வணிகம் வரம்பில்லாமல் விஸ்வரூபம் எடுக்கவே, வர்த்தக மதிப்புள்ள எதுவும் சந்தைக்குக் கொண்டு வரப்பட்டது. யானைகள் முதல் வைரங்கள் வரை இங்கும் அங்குமாகக் கடல்களைக் கடந்தன.
ஆர்மேனியர்கள், யூதர்கள் மற்றும் போர்த்துக்கீசிய வர்த்தகர்கள் உலகம் முழுவதிலுமிருந்து பல்வேறு பொருள்களைக் கொண்டு வந்து குவியல்களாகக் கடற்கரையில் கொட்டி வைத்தனர். அவற்றில் மிக விசித்திரமான இறக்குமதியானது இன்று நாம் அனைவரும் எந்தவொரு சிரமமும் இல்லாமல் பயன்படுத்துவதாகும். இருப்பினும் அந்த நாட்களில் அது ஒரு பிரம்மப்பிரயத்தனத்திற்குப் பிறகுதான் சென்னைக்கு இறக்குமதி செய்தனர். 1800களில் அதை அமெரிக்காவிலிருந்து கடல் வழியாக 10,000 மைல் கொண்டு வர, மிகவும் விரிவான திட்டமிடல் மற்றும் கடினமான பயணம் தேவைப்பட்டது.
அந்த சுவாரசியமான கதை கொண்ட இறக்குமதி – தண்ணீர். ஆனால் திட வடிவத்தில் கட்டியாக இருந்தது.
அதுவரை பனிக்கட்டியைப் பார்த்திராத மெட்ராஸ் மக்களுக்கு ஆச்சரியம். 1800களில் மெட்ராஸில் ஒரு சிலரே ஒரு பனிக்கட்டியைப் பார்த்திருக்கிறார்கள். (ஆலங்கட்டி மழையின் போது வெளியில் இருக்கும் அதிர்ஷ்டம் அல்லது இமயமலைக்கு விஜயம் செய்திருந்தால்). தமிழர் சொற்களஞ்சியத்தில் அதற்காக ஒரு வார்த்தைகூட இல்லை. காற்றில் உலவும் மூடுபனியை யாராவது திடப்படுத்தினால், அது இப்படித்தான் இருக்கும் என யூகித்து, பனிக்கட்டி என்று அவசரமாக அதை அழைத்தனர்.